ஞாயிறு, 20 டிசம்பர், 2009

மன்னிக்க வேண்டுகிறேன்...

சில நாட்களாகவே மனதில் ஏற்பட்ட குழப்பத்தால், புதிய இடுகை போடாமல் தவிர்த்து வந்தேன்.
திருக்குறளை புதுக் கவிதை வடிவில் எழுத விரும்பியதற்கு காரணம் அனைவருக்கும் திருக்குறளின் வாழ்க்கை நெறி கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்பதே. ஆனால் நான் நேசிக்கும் எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்களின் புற நானூறு - ஒரு எளிய அறிமுகம் என்ற நூலின் எதிர்வினை கருத்துக்களை படித்தவுடன் எனக்குள் அச்சம் ஏற்பட்டது உண்மை.
தமிழில் எனக்குள்ள புலமை மிகக் குறைவு. முக்கியமாக இலக்கண அறிவு மிக குறைவு என்பதால் திருக்குறளை புதுக் கவிதையாக எழுதும் முயற்சி தற்காலிகமாக கைவிடுகிறேன்.
நைடதம் புலவர்களுக்கு ஒளடதம் என்பார்கள். எனவே நைடத செய்யுள்களையும் அதன் கருத்துக்களையும் பதிப்பிக்க எண்ணியுள்ளேன்
இதன் மூலம் நானும் யாப்பிலக்கணத்தை முறையாக பயிலும் வாய்ப்பு உண்டு.
அடுத்த இடுகையிலிருந்து நைடதம் பயிலுவோம்.

ஞாயிறு, 22 நவம்பர், 2009

தமிழை எழுதி பயில எளிய வழி

 நான் காந்திகிராமத்தில் சிறிது காலம் கணித விரிவுரையாளராக பணியாற்றிய போது அங்கு துணைவேந்தர் அவர்களின் சிந்தனையில் உருவான எளிய பயிற்சி மூலம் தமிழை எழுத தெரியாத மூத்தவர்களுக்கு கிராமங்களில் ஏழே நாளில் எழுதி பயில பயிற்சி கொடுக்கப்பட்டது.
அதனை சிறிது விரிவுபடுத்தினால் நம் குழந்தைகளுக்கும் அழகாக தமிழை பிழையின்றி எழுத கற்பிக்க முடியும் எனத் தோன்றியது.
எனவே நான் தற்போது நடத்தி வரும் பள்ளியில் இதனை செயலாற்ற முனைந்து வெற்றி பெற்றேன்.
மேற்படி பல்கலைக் கழகத்தின் அனுமதி பெறாமல் இதனை பலரும் அறிந்து பயன்பெற வேண்டும் என்ற பொது நல ஆர்வத்தில் சுருக்கமாக அதனை விளக்குகிறேன்.
நமது சமச்சீர் திட்டத்தில் இதனை பயன்படுத்தலாம்.
முதலாவதாக குழந்தைகளுக்கு அ, ஆ எழுத கற்பிப்பதை விட,
1) நேர்கோடுகள் வரை.  --------->  1 1 1  1 1 1 1
2) படுக்கை கோடுகள் வரை  ---> - - - - - - - -
3) ட என்ற எழுத்து உச்சரிப்புடன் --> ட  ட ட ட
4) ப  என்ற எழுத்து உச்சரிப்புடன் ---> ப ப ப ப 
5) ட்  என்ற எழுத்து உச்சரிப்புடன் ---> ட் ட் ட் ட்
6) ப்   என்ற எழுத்து                                      ப் ப் ப் ப்
7) ம  என்ற எழுத்து                                      ம் ம் ம் ம்
8) பயிற்சி - 1  படம், மடம், பட்டம், மட்டம், படபட , மடமட , பப்படம்
இதன் மூலம் கை வளைவதற்கு சிரமமின்றி பல வார்த்தைகளை குழந்தையால் கற்க முடியும்.
வீட்டிலோ, வெளியிலோ அந்த வார்த்தைகளை கண்டால் உச்சரிக்க உற்சாகமாக முயலும்.
அடுத்தது, பா, டா, ர , ரா, மா, ய, யா எழுத்துக்கள்
பயிற்சி 2 : ரமா, டாடா, டமார், பயம், ராம், டாட்டா, பரம், ராமா, பரபர, மயம், யார், மாயமாய், படார், பார்.
கடைசி பயிற்சி வரும்போது கையில் எழுதுகோலை வளைத்து எழுத முயலும் போது வளைவு எழுத்துக்களையும், அ, ஆ, இ போன்ற எழுத்துக்களை கற்பிக்க முயலும் நேரத்தில் குழந்தையின் மொழியறிவும் வார்த்தை வளமும் அதிகம் இருக்கும், அதிக வார்த்தைகளை அனாயசமாக எழுதவும் படிக்கவும் தன்னம்பிக்கையுடன் ஆர்வத்துடன் படிப்பது திண்ணம்.
எனவே, சமச்சீர் திட்டத்தில் இதனை முதல் வகுப்பில் சேர்க்க காந்திகிராம பல்கலைக் கழகத்தின் சம்பந்தப் பட்ட அதிகாரிகளின் அனுமதி பெற்று சேர்க்க வேண்டும் என விரும்புகிறேன்.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

குறள் கூறுவது என்ன?

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.
மு.வ : நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
கருணாநிதி : குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.
சாலமன் பாப்பையா : நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம். 
இந்த கருத்துக்களில்  உள்ள முரண்பாடுகளை  பார்ப்போம்.
மு.வ கூறுவதிலிருந்து நற்பண்புகளை உடைய பெரியோர் சினம் கொண்டால் அதிலிருந்து யாரும் தப்ப முடியாது  என்கிறார்.
முரண் - 1. நற்பண்புகளை உடையோர் மலை  போன்ற அசையாத நிதானம் உடையவர்கள் சினங் கொள்வது எவ்வாறு?
முரண் - 2. கணப் பொழுதில் நிகழ்வதுதான் சினம். அதை தவிர்க்கும் குணம் இல்லாதார் எவ்வாறு பெரியோர் ஆக முடியும்?
சாலமன் பாப்பையா  அவர்கள் கூறுவதில் உள்ள முரண்பாடு
முரண் - 3. தமக்குள் கொண்டிருப்பதாக  குறள்  கூறுகிறது என்கிறார்.  அத்தகைய கருத்து உடைய  சொல்/ சொற்றொடர் குறளில் இல்லை.  கொண்டிருப்பது என்பது வேறு.  காத்தல்  என்பது வேறு.
கலைஞர் கூறுவதில் உள்ள முரண்பாடு
முரண் - 4 'நிலைத்து நிற்பது'  என்பது வேறு.  'காத்தல்'  என்பது வேறு.
என் கருத்தை  வெளியிடுமுன் சரவணன்  அவர்களின் கருத்து என்ன?

திங்கள், 7 செப்டம்பர், 2009

ஆண்டாளும், திருவள்ளுவரும் இட்லிவடையும் காமமும்

இன்று இட்லிவடை என்ற வலைப்பூவில் ஆண்டாளைப் பற்றியும் காமத்தைப் பற்றியும் படித்தேன். இவர்களுக்கு ஆண்டாளையும் தெரியாது. காமத்தைப் பற்றியும் புரியாது என்பதற்கு இன்றைய பதிவு ஒரு நல்ல உதாரணம். இதில் திருவள்ளுவரைப் பற்றி எழுதியிருந்தது என்னைக் கவர்ந்தது.  எனவே, திருக்குறளிலிருந்து காமம் என்ற சொல்லின் பொருள்  காண்போம்.
       காமம் என்ற சொல் அறத்துப் பாலில் தனி நிலைச் சொல்லாகவே ஓரிடத்தில் வந்துள்ளது. பொருட்பாலில் தொடருக்கு நிலை மொழியாக ஓரிடத்திலும், சொல்லுக்கு முதல் நிலையாக நான்கு இடங்களிலும் வந்துள்ளது.
       காமத்துப் பாலில் மட்டும் நோக்கினால், தனி நிலைச் சொல்லாகவோ, சொல்லுக்கு முதல் நிலையாகவோ முப்பத்தெட்டு இடங்களில் காமம் என்ற சொல் வந்துள்ளது.; காமன் என்ற வடிவில் ஓரிடத்தில் வந்துள்ளது. இன்பம் என்ற சொல்லோ காமத்துப் பாலில்  இரண்டே இடங்களில் மட்டுமே வந்துள்ளது. 
  • அவ்விரண்டிலுங்கூடக் காமம் என்ற சொல்லும் உடன் வந்துள்ளது.
  • காமம் இழிவு என்ற கருத்துடையவர்கள் திருக்குறளில் `காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கூடும் நோய்` என்ற குறளைச் சுட்டி காட்டுவர். இங்கு காமம் என்ற சொல் இழிந்த பொருளில் வந்துள்ளது என்பது உண்மையே. ஆனாலும் அதன் பொருள் என்ன?
  • காமம் என்ற சொல்லுக்கு பரிமேலழகர் `விழைவு` என்று பொருள் கூறுகிறார். பின்னர் விளக்க உரை கூறும்போது ஆசை என்று பொருள் கூறி, அவாவும் அதன்கண் அடங்கும் என்கிறார். 
  • `எனக்கு இது வேண்டும் என்பது அவா எனவும் `அது பற்றி அப்பொருள்கண் செல்லுவது ஆசை எனவும் விளக்குகிறார். 
  • எனக்கு இது வேண்டும் என்று கருதுவதால் மன நிறைவு குன்றுகின்றது. அது பற்றி அப்பொருள் கண் செல்லும் போது அம்மன நிறைவு மேலும் குறைகின்றது. 
  • எனவே, காமம் என்பதற்கு  நிறைவு குறைதல் என்பதே பொருள். 
  • ஆதாரங்கள் - `கமம் நிறைந்தியலும்` - தொல்காப்பியம்.
  • முனைவர் மொ.அ.துரை அரங்கசாமி எழுதிய `காமத்துப் பாலா, இன்பத்து பாலா` என்ற ஆராய்ச்சி நூல்.
  • காமம் என்ற தமிழ் சொல் இழிவான சொல் அல்ல. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பெருமாளை சரணடைந்த ஆண்டாளின் திருப்பாவை பற்றி நாளை எனது கருத்தை பதிவு செய்கிறேன்.
  • இலக்கியங்களின் உண்மைப் பொருளை உணராது நுனிப்புல் மேய வேண்டாம். 
  • எனது இந்த வலைப் பூவின் நோக்கமும் திருத்தம் என்ற வலைப் பூவின் நோக்கமும் இதுவே.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

குறள் 26 - 30

26. செய்வதற்கு பிறரால் இயலாத செயல்களை
      செய்வதற்கு இயலும் பெரியோர்கள்..
      செய்வதற்கு பிறரால் இயலும் செயல்களை
      செய்வதற்கு அஞ்சி நிற்பர் சிறியோர்கள்.
27. தொட்டு அறிவது செடியே,
      மொட்டு உள்ள நாவினால் அறிவது நத்தையே
     மூக்கினால் முகர்ந்து அறிவது எறும்பே
      நோக்கினால் அறிவது  நண்டே
      கேள்வி அறிவால் அறிவது விலங்கே
      ஆள்கின்ற ஐம்புலனுடன் பகுத்த்றிவர் பெரியோர்களே
28. கண்டும் கேட்டும் அனைத்து செய்திகளையும்
      விண்டுரைத்த பெரியோர் பெருமையை,
      எடுத்து உரைக்கும் அவர்களது நூல்களில்
     தொடுத்து உள்ள கருத்துக்களே
29.  நல்ல குணங்களால்  வாழ்க்கை எனும் மலையில் முன்னேறிய
       நல்ல மனங்களால் சினம் எனும் சிறு கல்லும் இடறி விழுவர்.

30  அந்த அன்பு எனும் தன்மை கொண்டதால்      அந்தணர் என்று அழைப்பர் பெரியோர்களை.

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

குறள் ௨௧ - ௨௫

௨௧ . ஏடுகளும் சொல்லும் துணிந்து
நாடும் ஒழுக்கத்தை அணிந்து
விருப்பங்களைத் துறந்து
இருக்கும் சான்றோரே சிறந்து
விளங்குகிறார் அனைத்திலும் என்று.
௨௨. விருப்பங்களைத் துறந்தவர்
பெருமையை அளந்து பார்ப்பதும் இன்றே
எவ்வளவு பேர் இறந்தவர்
எண்ணிப் பார்ப்பதும் ஒன்றே
௨௩. அறம் இது, அறம் அல்லது இது என்று தெரிந்து
அறம் செய்பவர் யாரென்று காட்டும் உலகு புரிந்து.
௨௪. கண் போன போக்கில் கால் செல்லவிடாமல் தடுத்து
தன் விருப்பம் போல உடல் இயங்கும் நிலை விடுத்து
வாயில் சொல்ல வரும் வார்த்தைகளில் அளவு எடுத்து
நோயில்லாமல் கேட்கும் காதுக்கும், மூக்குக்கும் தொடுத்து
மனதில் உறுதி உடையவர் விதையாவார் நல்ல நிலத்தை எடுத்து.
௨௫. கண் செய்த பிழையினால் உடலில் ஆயிரம் கொண்டவன்
தன் விருப்பப்படி உடலினை மாற்றி அகலிகையைக் கண்டவன்,
வாயில் விருப்பப்படி ஊர்வசியை அருச்சுனனுக்கு கொடுத்து,
நோயில் விழுந்தது போல நடித்து கர்ணனின் காது குண்டலம் எடுத்து,
தனது நாசியினாலும் தனக்கே கேடு வரவழைத்துக் கொண்ட இந்திரனே
மனது அடக்கத் தெரியாதவருக்கு நல்ல எடுத்துக் காட்டு.

ஞாயிறு, 1 மார்ச், 2009

குறள் 15-20

15 மழையும் அதிகமானால் நாசமே
உழைப்பவர்க்கோ மழையும் அவசியமே
16 துளியே ஆனாலும் மழைத்துளி விழாவிட்டால்
வெளியே தலை நீட்டாது புல் இதழே.
17 மழைதான் நீரைத் தராவிட்டால்
அலை கடலுக்கு நீர் ஏது?
18 வானத்திலிருந்து மழை தராத தேவருக்கு
ஆன பூசை தர மனம் ஏது?
19 தானம் செய்ய நீர்
வானம் தரும் நீர்
இல்லாது செய்ய இயலாது
எல்லா தவமும் நீர்
இல்லா மழை என்றால் இருப்பீர் முயலாது.
20 நீர் இருப்பதற்கும் நீர் பிறப்பதற்கும் தேவையான
நீர் இருப்பதற்கும் நீர் பிறப்பதற்கும் தேவை மழையே

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

குறள் 11-14

11. வானிலிருந்து இறங்கி வருது இந்த பூமி
தேனின் சுவையாய் மழைதான் நமக்கு சாமி

12. உண்பதற்கும் நீர், உணவை சமைப்பதற்கும் நீர்
உண்ட உணவை செரிப்பதற்கும் நீர்.

13. அருமை மழையை சுமந்து
கருமை அடையும் மேகங்கள்
வருகை தர மறுத்தால்
வருகை தரும் பசியே.

14. மாரி இல்லை என்றால்
ஏரி இல்லை ஏருக்கும் தேவையில்லை

வியாழன், 12 பிப்ரவரி, 2009

குறள் 9,10

9. குணங்கள் எட்டு உடையவனை
வணங்காத தலை உடையவனுக்கு
இணங்காது அவனது ஐம்புலனும்.

10. கடலி்லும் நீந்தி கரையேறலாம்.
உடல் எடுத்த பிறவி பயனடைய
கடவுள் அடி சேர்

குறள் 4 முதல் 8 வரை

4) வேண்டும் இன்பம்
வேண்டாம் துன்பம் என்போர்
வேண்டும அன்பும்
வேண்டாம் துயரமும் எனும் இறைவன் அருள்
வேண்டும் என்றே கருதுவார்
5) மீண்டும் பிறக்கும் வழி தருதலால் நல்லதும்
தூண்டும் மறுபடியும் என்பதால் நல்லது அல்லதும்
வேண்டும் வரம் தரும் இறைவனை
வேண்டுவோர் செய்ய மாட்டார்
6) கண்களால் தீயது நோக்கி புண்ணாக்காது
காதுகளால் தீயது கேட்டு பாதகம் செய்யாது
மூக்கினால் தீயது முகராமல்
வாக்கினால் தீயது பகராமல்
ஆக்கிய உடலினால் தீயது செய்யாமல் இருப்பர் இறைவனை
கண்ணால் கண்டு, காதால் புகழ் கேட்டு
வண்ண மலரால் அழகு செய்து வாயார வாழ்த்தி உடலால்
பண்ணிய புண்ணியம் உடையோர்
7) இறைவன் போல யாருண்டு
உறையும் மனதில் கவலையை
இறைவனை போல் தீர்ப்போர் யாருண்டு

8) கரை சேர நீந்தினாலும் இயலாது
இறைவன் தாள் சேர முயலாது
உறையும் உள்ளமுடையோர்

புதன், 11 பிப்ரவரி, 2009

புதுக் கவிதையில் திருக்குறள்

இந்த பகுதியில் எளிய தமிழில் இலக்கியத்தை அறிமுகப் படுத்த எண்ணியுள்ளேன். முதல் முயற்சியாக திருக்குறளைப் புதுக் கவிதை வடிவில் தர உள்ளேன். வாசிப்பவர்களும் பங்கு பெறலாம். மூலக் கருத்து சிதையாத வண்ண்ம் பாமரரும் புரியும் வண்ணம் எழுத வேண்டும் என்பதே நோக்கம்.
திருக்குறள்
அதிகாரம் 1 குறள் 1
அ எழுத்தில்
தொடங்குது தமிழ் எழுத்து
அனைத்திற்கும் தொடக்கமான இறைவனை வழுத்து.(வாழ்த்து)

குறள் 2
பயனில்லை
படிப்பதினால்
இறைவனை வணங்காவிடில்

குறள் 3
வாழலாம்
வையகத்தில்
வணக்கத்திற்குரியவனை வணங்கினால்.