புதன், 24 நவம்பர், 2010

கவிதை வாங்கி வந்தேன் - நந்தவனத்தில் ஒரு ஆண்டி - இறுதிப் பாகம்.

இது இறுதிப் பாகம். மற்ற பாகங்களைப் படிக்க இங்கே செல்லவும்.

 நந்தவனத்தில் ஒரு ஆண்டி  -1 

நந்தவனத்தில் ஒரு ஆண்டி - 2 

 நந்தவனத்தில் ஒரு ஆண்டி - 3


நம்ம நட்பாஸ் இருக்கிறாரே. அவர் ஒரு பதிவரின் வலைப்பூவில் கர்மாவைப் பற்றி எழுதியதைத் தற்செயலாக இன்று படிக்க நேர்ந்தது. அதில் உள்ள ஒரு பின்னூட்டம் என்னைக் கவர்ந்தது. நம்ம தலைவரின் பாடல் வரிகள்தான். கவிஞர், பாடகர் எல்லாம் முக்கியமில்லை.

பாடல் வரிகளைப் பார்ப்போம்.
“காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்?”

மேலே தொடருமுன் இன்னொரு விளக்கம். நம்ம நட்பாஸ் கவிதையைப் பற்றி மெனக்கெட்டு விளக்கி எப்படி படிக்க வேண்டும் என்றெல்லாம்... வேண்டாம். இந்த பதிவுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. எனவே அந்தப் பதிவு பற்றிய சுட்டியைத் தவிர வேறு எதுவும் இங்கு அதைப் பற்றிக் குறிப்பிட போவதில்லை. சிறந்த கட்டுரைகளில் ஒன்றான அதைப் படிக்க இங்கே, மற்றும் இங்கே செல்லவும்.

சரி.

பாடலைப் பார்ப்போம்.

‘காற்று வாங்கப் போனேன்’

மனிதனின் மூச்சு பற்றி திருமூலர் அழகாக விளக்கியிருப்பார். பிரணாயாமம் பற்றி திருமந்திரத்தில் தெளிவாக உள்ளது. அதைப் பற்றி திருமந்திரத் தொடரில் விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

காயமே இது பொய்யடா! காற்றடித்த பையடா என்று சித்தர்கள் சொல்லும் காற்றைப் பற்றி இங்கே சிந்தித்துப் பார்க்கலாம்.

என்னங்க கடற்கரையில் காற்று வாங்கப் போனதை இப்படியா தத்துவம் என்கிற பேரில் அர்த்தம் கொள்வது என்று சண்டைக்கு வரும் அன்பர்களே, ஒரு நிமிடம் கவனியுங்கள். விட்டால் இப்போதைய உலகில் காற்றில் மாசு பரவி வரும் விகிதத்தில், மினரல் வாட்டர் விற்பது போல் பிராணவாயுப் பைகளையும் விற்கும் காலம் விரைவில் வரும். (இப்போதே அங்கங்கே மலைப் பிரதேசங்களில் உதாரணமாக சபரிமலையில் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்காக ஆக்ஸிஜன் அறைகள் கட்டப் பட்டிருக்கின்றன. எனவே, உயிருடன் இருப்பதற்காக காற்று வாங்கி வரும் காலம் வரும்.

‘ஒரு கவிதை வாங்கி வந்தேன்’

காற்று வாங்கப் போன இடத்தில் காற்று வாங்காமல் கவிதை வாங்கி வந்தால் என்ன பொருள்?

நீ பிழைக்க சுத்தமான காற்று கிடைக்கவில்லையென்றால் இந்தா இந்த கவிதை, எடுத்துப்
போ. உன்னை பிழைக்க வைக்கும் என்று பொருளா?
உயிரைக் காக்கும் கவிதை உன்னதக் கவிதை அல்லவா?
உயிரைப் பிழிந்து எழுதியக் கவிதை உண்டு. உயிரைப் போக்கிய கவிதை எங்காவது உண்டா? அறம் வைத்துப் பாடிய பாடல்களால் உயிர் போனது உண்டு. ஒரு பாடல் வகையினால் அமைந்தப் பாடல் வரிகளைக் கேட்பதற்காகவே இறந்து விட்டதாக நாடகம் ஆடி பாடலைக் கேட்டு இறந்த மன்னனும் உண்டு.

காற்றே ஒரு கவிதைதானே?

தென்றலாய் ஒரு வரி
புய்லாக ஒரு வரி
குளிர்ச்சியாக ஒரு வரி
வெப்பமாக ஒரு வரி என காற்றே ஒரு கவிதையாகத்தான் இருக்கிறது.

கவிதையைப் படிப்பவர் சிலர். கேட்பவர் சிலர். ஆனால் இங்கு கவிதை வாங்கி வரப்படுகிறது.

அந்தக் கவிதை எது? அதை விற்றவன் யார்?

நந்தவன ஆண்டி வேண்டி வாங்கி வந்தது கவிதையா? தோண்டியா?(குடமா)
‘அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்த கன்னி என்ன ஆனாள்’

அட! கவிதையே கவிதையை கேட்டு வாங்கிப் போகிறதே?

இங்கு காற்றும் சுவாசிக்கப்படவில்லை, வாங்கப்படுகிறது

கவிதையும் கேட்கப்படுவதில்லை, காற்று வாங்க்ப் போனவரால் கவிதை வாங்க்ப்படுகிறது.
காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தவரும் கவிதையைப் படிக்கவில்லை. அதையும் ஒரு கன்னி கேட்டு வாங்கிப் போகிறாள்

அந்தக் கன்னியாவது படித்தாளா? அதுவும் தெரியவில்லை. என்ன ஆனாள் என்றே
தெரியவில்லை.

நந்தவன ஆண்டி நாலாறு மாதமாக குயவனை வேண்டி, கேட்டு வாங்கி வந்த தோண்டியையும் சரி, கவிதையையும் சரி கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்ததுதான் மிச்சம்.

நான் சொல்ல முற்படுவது இதுதான்.

கவிதையின் அழகை இரசிப்பதோடு நின்று கொள்ள வேண்டும். மீறி கவிதைக்கு கோனார் நோட்ஸ் போட்டால் கவிதை கவிதையாக இருக்காது. வெறும் வார்த்தைகள்தான் மிஞ்சும்.
எனவே எந்தக் கவிதையாவது படிக்க் நேர்ந்தால் அதனை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளப் போகிறேன். எந்தக் கவிதையையும் ஆராய போவதில்லை. எந்தக் கவிதையையும் படிக்கவும் போறதில்லை.

இது எனக்கு நானே போட்டுக் கொண்ட வேலி. மற்றவர்களைக் கட்டுபடுத்தாது.

காற்றுக்கு என்ன வேலி?
(அட! காற்றைப் பற்றிய அடுத்த தொடர் ரெடி)