திங்கள், 25 அக்டோபர், 2010

அறிவியல் புனைவு

நண்பர் பாஸ்கர் நம் வலைப் பூவிலும் எழுத சம்மதித்துள்ளார்.
பாஸ்கர் எழுதியது
அண்மையில் நான் ஒரு வலைப்பதிவரின் தளத்தில் பின்னூட்டமிட்டேன். கணேஷ் என்பவர் அறிவியல் புதினங்கள் எழுதுகிறார், அவர் தனது தொடர் ஒன்று குறித்து சில விஷயங்களை எழுதியிருந்தார்-


"புதிய ஜீனோ ஜெனடிக் முறையை மேம்படுத்தி அதில் உருவாக்கிய கொஞ்சம் ரொபோடிக் தன்மை கொண்ட நாய்....இனி எழுதப்போகும் சில கதைகளில் இந்த ஜீனோவை அதன் அறிவுத்திறமையை உபோயிக்கலாம் என் நினைக்கிறேன்...

அதாவது கணேஷ் – வசந்த் இவர்களில் கணேஷ் இப்போது கதை எழுதுவதால் அவனுக்கு பதில் இந்த ஜீனோ வசந்தோடு சேர்ந்து கொண்டு தன் வேலையை செய்யும்..ஜீனோவை எப்படி எந்த விசயங்களுக்கு வசந்த் பயன்படுத்திகொள்கிறான் என்பதில் இருந்து புதிய ஜீனோவின் திறமைகள் வெளிப்படும்...

இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள் இருந்தால் எனக்கு சொல்லலாம்....எனக்கு கொஞ்சம் உபயோகமாக இருக்கும்."
இப்படியெல்லாம் கேட்டால் சும்மா விட்டு விடுவோமா? அதையொட்டியே நான் பின்னூட்டமிட நேர்ந்தது. ஆனால் அதன் பின் ஒரு நான்கு மணி நேரத்துக்கு அது குறித்த நினைவாகவே இருந்தது.- தமிழில் அறிவியல் புதினம் எழுதுவதானால் எப்படி எழுத வேண்டும் என்று.

அதற்கு முன் நான் இட்ட பின்னூட்டத்தை சொல்லி விடுகிறேன்-
நல்ல முயற்சி நண்பரே, ஓரிரு வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன்.

robotics, genetics இரண்டையும் இணைத்து ஜீனோவை உருவாக்க நினைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கூடவே கொஞ்சம் biomimetics http://en.wikipedia.org/wiki/Biomimicry என்ற துறையையும் சேர்த்துக் கொள்ளலாமே?

இதுவரை தமிழில் யாரும் இதை செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

சுஜாதாவிடம் சிறப்பான விஷயம் முதலாவதாக அவரது மொழி நடை. அடுத்தது, அவர் புதிது புதிதாக எங்கெங்கிருந்தோ விஷயங்களைக் கொண்டு வருவார்.

துணிச்சலாக இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண என் வாழ்த்துகள்.

இவ்வளவுதானா விஷயம்?

ஏறக்குறைய ஆம் என்றுதான் நினைக்கிறேன்.

பொதுவாக இன்றைக்கு சுஜாதாவுக்கே கெட்ட பேர் வந்து விட்டது. அதிலும் ஒருத்தர் சுஜாதாவைப் போல் எழுதக் கிளம்பினால் அவரை வாழ்த்தி வழி அனுப்பும்போது, புறநானூற்றுப் போருக்கு பிள்ளையை அனுப்புவாளே, அந்தத் தாயின் நினைவு வருகிறது. எல்லாரும், "நீ சுஜாதா மாதிரி எழுதாதே," என்றுதான் சொல்கிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு- ஒன்று, அவரை நினைவுபடுத்துகிற மாதிரி எழுதினால் நம் குறைகள்தான் தெரியும். அவரைப் போல் எழுதுவது இன்று வாழும் மனிதர்களில் எவராலும் முடியாத ஒன்று.

இரண்டாவது காரணம்- இது ஒரு எழுத்தாளனுக்கு தனித்தன்மை வராமல் செய்து விடும். ஒருத்தரை காப்பி அடித்து எழுதுவதில் என்ன பெருமை இருக்கிறது?

முதல் காரணத்துக்கு என் மறுப்பு- நான் சுஜாதா மாதிரி என்ன, என்னை மாதிரி என்ன, எப்படி எழுதினாலும் அது மோசமாகத்தான் இருக்கும்.

இரண்டாவது காரணத்துக்கு என் மறுப்பு- ஒருத்தர் எழுத ஆரம்பிக்கும்போது மற்றவரின் நடையை, அவரது பார்வையை ஒட்டி எழுதினால் தப்பில்லை. பாட்டு விஷயத்தில், நடன விஷயத்தில் இப்படித்தான் நடக்கிறது. ஏறத்தாழ எல்லா கலைகளிலும் ஆசான் ஒருவரைப் பிரதி எடுத்துத்தான் பழகுகிறார்கள். இதை நன்கு பழகிய பிறகுதான் தனக்கென்று ஒரு பாணியில் தேர்ச்சி பெறுகிறார்கள்.

ஆனால் அதற்காக கணேஷ், வசந்த், ஜீனோ என்று எழுத வேண்டிய அவசியமில்லை- சொல்லப்போனால் அது காப்புரிமை மீறலாகவும் இருக்கக்கூடும். எனவே இதைத் தவிர்ப்பது நல்லது.

மொழி நடை பற்றி சொல்லி விட்டேன். புதிய விஷயங்களைக் கொண்டு வந்து தருவது?

சுஜாதா அசகாய சூரர். அந்த காலத்திலேயே உலகில் புதிதாய் நடக்கிற, கவனத்தில் இருக்கிற விஷயங்களை தமிழுக்குக் கொண்டு வந்து கொடுக்கக் கூடிய அறிவு அவருக்கு இருந்தது- அதையும் அவர் வசீகரமான நடையில் செய்தார்.

நமக்கு இணையம் இருக்கிறது- தினமும் குறைந்தது ஒரு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் இணையத்தில் இதற்கென மெனக்கெட தயாராய் இருந்தால் எந்த விஷயத்தையும் சூடு ஆறுவதற்கு முன்னமேயே தெரிந்து கொண்டு விடலாம்.



அந்த வகையில் நான் இதை எல்லாமாவது பதிவோடையைப் பயன்படுத்தி வாசிக்கலாம் என்று சொல்வேன்-

New Scientist online news- http://www.newscientist.com/ வாரம் 72 பதிவுகள்.
IEEE Spectrum - http://feeds2.feedburner.com/IeeeSpectrum வாரம் 29 பதிவுகள்.
Wired top stories- http://feeds.wired.com/wired/index வாரம் 140 பதிவுகள்.
Slashdot: science- http://rss.slashdot.org/Slashdot/slashdotScience வாரம் 34 பதிவுகள்.
Science Daily - http://www.sciencedaily.com/rss/newsfeed.xml வாரம் 305 பதிவுகள்.
TED http://feeds.feedburner.com/TEDTalks_video வாரம் 5 பதிவுகள்.

அறிவியல் உலகில் எந்த புதிய, முக்கியமான விஷயமாக இருந்தாலும் அது நம் கண்ணில் படாமல் போகாது. இதைத் தெரிந்து கொள்ள தினம் ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும்.

ஆனால் கற்பனை, கதை பண்ணுவது இது எல்லாம் அவரவர் திறமை மற்றும் முனைப்பைப் பொறுத்தது. இதில் கூட ஒரு இன்ஸ்பிரேஷன் வேண்டுமென்றால் http://sff.alltop.com/ என்ற தளத்தில் ஏராளமான அறிவியல் புனைவு குறித்த விஷயங்கள் இருக்கின்றன. பொழுது போகாத சமயத்தில் இதை நோண்டிக் கொண்டிருக்கலாம்.

ஆனால் எது எப்படியோ, எழுத ஆர்வம், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு, தொடர்ந்த உழைப்பு- இவை இருந்தால் நிச்சயம் நம்மால் நல்ல அறிவியல் புனைவுகள் செய்ய முடியும்.

சுஜாதாவின் சிறகுகளின் பறக்க ஆசைப்படுவதை விட, சுஜாதாவை ஒரு துருவ நட்சத்திரம் போல் வைத்துக் கொண்டால் சரியான திசையில் பயணித்து இலக்கை அடைந்து விட முடியும் என்று நினைக்கிறேன்.

இதை படித்து விட்டு யாரேனும் அறிவியல் கதைகள் எழுத முனைந்தால், அவர்கள் அனைவருக்கும் எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்.

வெள்ளி, 8 அக்டோபர், 2010

அய்யோ ! தீ !! தீ !!! (சவால் சிறுகதை)

இடம்: ஏதோ ஒரு பிக்னிக் ஸ்பாட்
தேதி: 29 - 10 - 2005
(காமினியும், காமினியை காதலித்தவனும் நண்பர்களோடு பிக்னிக் வந்துவிட்டு, தனியாக உட்கார்ந்த படலம்.)
”காமினி”
“ம்”
“முகத்தை காமி நீ”
”முடியாது”
“இந்த காலத்திலே வெட்கமா?”
“ நான்சென்ஸ். வெட்கமாவது ஒன்னாவது? பேசியல் பண்ணியிருக்கிறேன். வெயில் நேரா விழுது.”
”பிக்னிக் வந்துட்டு இப்படி உட்கார்ந்திருந்தா என்ன பேசறது?”
”என்ன முடிவு பண்ணியிருக்க”
“ நீதான் முடிவு எடுக்கணும். தைரியமா, ஆம்பளையா லட்சணமா வந்து பொண்ணு கேளு”
“ நாந்தான் சொன்னேனே. இதில தைரியம் எல்லாம் இல்லை. அப்பாவுக்கு அந்தஸ்து, பணம் முக்கியம். எனக்கு நீதான் முக்கியம்”
“அப்போ கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே”
“சாரி. அம்மா இல்லாத குறையை மறக்க வைத்தவர்”
“காதலியையும் மறக்க சொல்றாரா?”
“இல்லடா. எப்படியும் சம்மதம் வாங்கிருவேன். பொறுத்துக்கோ”
கடிகாரத்தைப் பார்த்து, “மூணு வருடம் இரண்டு மாசம் மூணு நாள் பொறுத்தாச்சு” என்றாள்.
“ஒரு அஞ்சு நிமிஷம் முகத்தை மூடிகிட்டு இப்படியே இரு”
“அட அதுக்குள் சம்மதம் வாங்கிருவியா”
“ஒரு காளான் பூரி வாங்கிட்டு வந்துருவேன்”
“சே”
அவன் இடத்தை விட்டு நகர்ந்த நான்காவது நிமிடம் அது நடந்தது.
***********
இடம்: அதே பிக்னிக் ஸ்பாட்
தேதி : 29 - 10 - 2005.அதே தேதி
(ஒரு குழந்தையின் தந்தையும், ஒரு தந்தையின் குழந்தையும் விளையாடிக் கொண்டிருந்ததை தந்தை நினைத்த படலம்.)
”அப்பா நான் கண்ணை மூடிக்கிறேன். நீ போய் அதை ஒளிச்சு வை”
“சரிம்மா. நான் போய் ஒளிச்சு வச்சுட்டு வரேன். அதுவரைக்கும் கண்ணை திறக்காதே”
“போப்பா. நீ எங்கே ஒளிச்சு வச்சாலும் நான் கண்டுபிடிச்சுருவேன். நான் போலீசாக்கும்”.
”கண்ணம்மா, இப்போ நீ எங்கே போய் ஒளிஞ்சுகிட்டே. என்னால் பார்க்காம இருக்க முடியலியே” - பிரிய மகளின் இறப்பினை நினைத்து அழுதார் பரந்தாமன்.
************
இடம்: அந்த ஊருதாங்க.
தேதி : 22 - 10 - 2010
(காமினியும், பரந்தாமனும் சிந்தித்த படலம்.)
” உறுதியாகவா?” - கேட்டாள் காமினி.
"ஆமாம்” - என்றார் பரந்தாமன்.
நிச்சயமா தெரியுமா?
”வக்கீல் சொன்னார். தீர்ப்பைத் தள்ளிப் போட முடியாதாம்”.
“இப்போ என்ன பண்றது?”
“காமினி இனியும் தாமதிக்க முடியாது. தீர்ப்பு வெளிவந்தால் இன்னும் குழப்பம்தான். இரண்டு பக்கமும் அப்பீல் செய்கிறேன்னு சொல்லி இன்னும் இழுப்பாங்க. அந்த 2.7 ஏக்கரில் நாம உள்ளே நுழைய முடியாது. என்ன செய்யலாம்?” என்றார் பரந்தாமன்.
”எல்லாம் என்னுடைய தப்புதான். படம் எடுக்கலாம்னு அங்கே போனேன். காமிராவில் பிலிம் மாற்றும்போது விரலில் மாட்டியிருந்த நீ கொடுத்த டைமண்டு மோதிரம் அங்கே விழுந்திருக்கும். வழக்கு நடக்கிறதால போலீஸ் இப்போ யாரையும் உள்ள விடறதில்லை. நான் போனால் எந்த இடத்தில் எல்லாம் நின்னுட்டிருந்தேன்னு ஞாபகம் இருக்கு. அங்கிருந்த புளிய மரத்தடியில்தான் விழுந்திருக்கும். ஈஸியா கண்டுபிடிச்சுடுவேன்” என்றாள் காமினி.
”சரிதான். நீ போலீஸுக்குப் போனாலும் ஏன் அங்கே போனாய்? எதுக்கு படம் எடுத்தேன்னு கேள்வி மேல் கேள்வி கேட்பாங்க. சும்மா ஒரு படம் போட்டு படம் + புதிர் அப்படின்னு மொக்கையா பதிவு போடப் போனேன்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான். வைர மோதிரம் கிடைச்சாலும் போலீஸே எடுத்துகிட்டு கிடைக்கலைன்னு சொல்லிட்டா என்ன பண்றது? ஏதாவது திட்டம் போட்டுத்தான் நாமளே எடுக்கணும்.” என்றார்.
“எனக்கு ஒன்னு தோணுது”
”என்ன?”
”அந்த இடத்தை ஒட்டி ஒரு ஆஸ்பிடல் இருக்கு”.
”சரி”
“ஆபரேசன் தியேட்டருக்கு பின்னாடி ஆம்புலன்ஸ் வந்து போக ஒரு வழி இருக்கு.”
“ஆமா. அதிகமா யாரும் பயன்படுத்தறதில்லை”
“அதையொட்டி இருக்கிற வேலியை எட்டி குதித்தால் அந்த மரம் அருகில்தான்”
“அதுசரி. அங்கே எப்படி போறது?”
”எனக்கு வண்டியில் அடிபட்டு மயக்கம்னு சொல்லி அங்கே என்னை ஆம்புலன்ஸில் எடுத்துட்டுப் போ”
“ சரி, நான் உன்னை முதலில் முன்னாடி கொண்டு போறேன். ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துட்டு போனதும் ஆம்புலன்ஸை பின்னாடி கொண்டு வரேன். அதுக்குள்ளே நீ அந்த இடத்திற்குப் போய் தேடி எடுத்துட்டு வந்திரு”.
“ஆபரேஷன் தியேட்டரிலிருந்து எப்படி தப்பிக்கிறது?”
“மயக்க ஊசி போடற டாக்டர் காசுன்னா மயங்கற ஆளு”.
“அவனை மட்டும் சரிகட்டினா போதுமா”
“போதும். முதலில் மயக்க ஊசி போடற டாக்டர் மட்டும்தான் தியேட்டரில் இருப்பார். அவர் பேஷண்டை மயக்கமடைய செய்துட்டு வெளியே வந்து சொன்ன பிறகுதான் ஸ்பெசலிஸ்ட் மற்றவங்க எல்லாரும் உள்ளே போவாங்க”.
மேலும் விவாதித்தார்கள். காபி குடித்தார்கள். விவாதித்தார்கள். திட்டம் தெளிவானதும், ஆஸ்பிடலுக்கு போனார்கள்.
*************
இடம்: அந்த ஊருதாங்க.
தேதி: 22 - 10 - 2010.
(சிவாவும் ஆதியும் சந்தித்த படலம்.)
“ஏம்பா சிவா, உன்னை காலேஜில் பார்த்தது. இப்போதான் போலிஸ் ஸ்டேஷனில் பார்க்கிறேன்” என்றான் ஆதி.
”ஆமாம். இப்போதான் ட்ரெயினிங் முடிந்ததும் இங்கே போஸ்டிங். ஒரு இடத்திற்கு காவல் நிற்கணும். போரடிக்கிறது” என்றான் சிவா.
”காலேஜில் எப்போ பார்த்தாலும் அட்வெஞ்சர் வேணுமுன்னு சொல்லிட்டே இருப்பே. இப்போதான் நினைவுக்கு வருது. அந்த அட்வெஞ்சருக்கு பிறகு உன் ஆளை நீ பார்க்கலியா?”
“இல்லை. அந்த பிக்னிக்லே ஒரு பிக்பாக்கெட்டு அவளுடைய பர்ஸை பிடுங்கிட்டு ஓடினான். நானும் துரத்தி போய் அவனை அடிச்சு பர்ஸை வாங்கினேன். நீங்க எல்லாரும் பர்ஸிலிருந்த 5 ரூபாயை காட்டி இதுக்கா துரத்திட்டு போனேன்னு சிரிச்சீங்க. 5 ரூபாய்க்கு அவனை பிடிச்சு ஜெயிலில் போட நீ என்ன போலீஸா என்று அவளும் ஏளனமாக சிரித்தாள். ஆனால் அப்போதான் நான் போலீசாகனும்னு நினைச்சேன். 5 ரூபான்னாலும் திருட்டு திருட்டுதானே. உடனே அப்ளை பண்ணினேன். டிரெயினிங்கிற்கு கோவை போனேன். அவளை சந்திக்கவேயில்லை.”
”சரி. பிறகு வீட்டிற்கு வா. நிறைய பேசலாம்”.
“ஓ.கே”
**************
இடம்: நம்ம ஊருதாங்க.
தேதி : 22 - 10 - 2006
(காமினியும் பரந்தாமனும் உரையாடிய படலம்)
”உன்னுடைய பர்ஸை எடுத்துட்டு ஓடிப் போய் அடிவாங்கினேனே. என்னை திருடன்னு நினைச்சியா” என்று கேட்டார் பரந்தாமன்.
“அதான் அப்புறம் வீட்டிற்கு வந்து விளக்கினீங்க்ளே” என்றாள் காமினி.
“அப்போ என்னுடைய ஒரே மகளை விபத்துல பறி கொடுத்துட்டு பித்து பிடிச்சு போயிருந்தேன். என் மகள் மாதிரியே முகத்தை மூடி உட்கார்ந்திருந்ததால என்ன செய்யறோம்னு தெரியாமல் செய்துட்டேன்.”
“எவ்வளவு பணம் இருந்து என்ன பயன். உங்கள் மகளைக் காப்பாற்ற முடியலை. அதான் என்னை மகளாக தத்தெடுத்திட்டீங்க.”
*****************
இடம்: அந்த ஊருதாங்க.
தேதி: 22 - 10 - 2010.
(வாதியும் பிரதிவாதியும் உரையாடிய படலம்).
“இதோ பார். நான் கட்டியிருந்ததை இடிச்சுட்டுதான் நீ கட்டினேன்னு சொல்லி உன்னுடையதை நான் இடிச்சேன். அதுக்கும் இதுக்கும் சரியாப் போயிடுச்சு”
“ஒத்துக்க மாட்டேன். நீ இடிச்சதுக்கு தீர்ப்பு வரட்டும்.”
”மண்ணாங்கட்டி. தீர்ப்பு வந்தால் புதுசா வந்திருக்கானே சொந்தம் கொண்டாடிட்டு. அவனுக்கும் ஒரு பங்கு போயிடும்”
”அப்போ என்ன செய்யலாம்?”
“ நான் சொல்றதை கேளு. அந்த உயிலுதான் எல்லா பிரச்சினைக்கு காரணம். அது அந்த கட்டிடத்தில்தான் இருக்கு. அதை வச்சுதான் அவனும் பங்கு கேட்கிறான். நைஸா உள்ளே புகுந்து கட்டிடத்திற்கு ஒயர் பத்திகிட்ட மாதிரி தீ வச்சுடுவோம். எல்லாம் எரிஞ்சுடும். தீர்ப்பும் நமக்கு சாதகமா வந்ததும் இரண்டு பங்கா சரிபாதி பிரிச்சுக்குவோம். நானே உன்னுடையதை கட்டி தரேன். நீ என்னுடையதை கட்டிக் கொடு.”
”சரி”.
***************
இடம்: அந்த ஊருதாங்க.
தேதி: 22 - 10 - 2010 நள்ளிரவு.
(பரந்தாமன் கதறிய படலம் / எல்லாருமே பதறிய படலம்)
”டாக்டர் சார் ! எப்படியாச்சும் என் காமினியை காப்பாத்திருங்க”. கதறினார் பரந்தாமன்.
” நான் மயக்க ஊசி போடற டாக்டருப்பா”
”பரவாயில்லை. நீங்களும் டாக்டர்தானே. இந்தாங்க பத்தாயிரம். எப்படியாச்சு காப்பாத்திருங்க. எவ்வளவு செலவானாலும் நான் தரேன்”
டாக்டர் பேரில் மட்டுமல்ல மனதிலும் சந்தோஷம்.
“சரி. சரி இங்கே கூட்டம் போடாதீங்க. எல்லாம் முடிஞ்சதும் சொல்கிறேன்.”
டாக்டர் உள்ளே சென்று காமினியைத் தொட்டார்.
”டாக்டர் நீங்க மருந்து கொடுக்க என் கணவர் பணம் தந்தாரா?”
”ஆமா. நேரே படுங்க”
“எனக்கு மருந்து கொடுக்கலைன்னா நாலு மடங்கு பணம் தரேன்”
“அது சரி. உனக்கு வலியில்லையா”
“இல்லை. நான் இப்போ என்ன செய்தாலும் நீங்க பேசாம இங்கேயே இருந்தால் இன்னும் பணம் தரேன்”
1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
அந்த மரத்திற்கு அருகே ஓடினாள்.
ரோந்துக்காக சுற்றி வந்த சிவாவின் கண்ணில் வைரத்தை கையில் எடுத்துக் கொண்டிருந்த காமினி பட்டாள். அருகில் சென்றான்.
”ஓ ! சிவா ! நீயா? எப்படியிருக்கிறே? இது என்னுடைய டைமண்டு. “
”சாரி. நான் பழைய அசட்டு சிவா இல்லை. பர்சில் அஞ்சு ரூபாய்க்கு மேல் வைக்க முடியாத உனக்கு அஞ்சு லட்சம் பெறும் அந்த டைமண்டு உன்னுடையதுன்னு நான் நம்ப தயாரா இல்லை. என்கிட்டே கொடு.”
”என்னை நம்பு. இது 5 ரூபாயில்ல. டைமண்டு. எனக்கு பரிசா கிடைச்சது. இங்கே தவற விட்டுட்டேன்.”
” இப்போ கொடுத்திட்டு நாளைக்கு ஸ்டேஷனில் வந்து வாங்கிக்க”
”முடியாது. இப்போ என்னை விட்டுரு. நாளைக்கு விவரமா சொல்றேன்” கெஞ்சினாள் காமினி.
2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
அப்போதுதான் புகை நாற்றம் அவர்களை கட்டிடத்தை திரும்பி பார்க்க வைத்தது.
“அய்யோ ! தீ ! தீ !
சடாரென சிவா கட்டிடத்தை நோக்கி ஓட காமினி வேலியை நோக்கி தாவினாள்.
********
இடம்: நம்ம ஊருதாங்க
தேதி: 23 - 10 - 2010.
(தொலைத்தது கிடைத்ததும் கிடைத்ததை தொலைத்த படலம்).
3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
’இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டேன். அந்த டைமண்டைத் தொலைச்சுட்டேன்.” என்று மனதிற்குள் நினைத்து அழுதாள் காமினி.
முற்றும்.