வெள்ளி, 24 டிசம்பர், 2010

மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்

பாஸ்கர் அவர்களின் ஹைகூ (குறும்பா) கவிதைகள் – ஒரு பார்வை.

முதலில் அவரது கவிதை - 1

***************************************
நின்று கொண்டேயிருக்கிறது

கேள்விகளுக்கு விடை அறியாமல்

மரம்

**************************************************
இந்தக் கவிதையை படிக்கும்போது என் நினைவிற்கு
வரும் கவிதை.
மண்ணுக்குள் கூந்தலை
மறைத்து புதைத்து விட்டு
கைகளில் பூச்சூடி
களிக்கின்ற பைத்தியங்கள்.

இனி என் பார்வை.

கேள்விகளுக்கும் மரத்திற்கும் ஆதியிலிருந்தே தொடர்பு இருந்திருக்க வேண்டும். இல்லாவிடில் ஏன் கேள்விக்கு பதில் தெரியவில்லையென்றால் மரம் மாதிரி நிற்கிறாய் என வினவுகிறார்கள்?

எனவே இந்தக் கவிதை ஒரு உண்மையை தெளிவாகச் சொல்கிறது.

கேள்விகளுக்கு விடை தெரியாமல் நின்று கொண்டேயிருக்கட்டும். ஆனால் கேள்வியே என்ன எனத் தெரியவில்லை. யார் கேட்டது என்று புரியவில்லை.

எப்போது கேட்டிருக்க கூடும்?
மரம் முளைத்த போதா? அப்போது அது செடி. மரம் அல்ல.
வளர்ந்து மரமாக உரம் ஏறிய போதா? எக்கணத்தில் ஏற்பட்டது அந்த மாற்றம் என்பது அந்த மரத்திற்கே தெரியாது.

நின்று கொண்டிருந்த மரம்
சாய்ந்த பின்னர்
பதில் சொல்லி விட்ட பின்னர்தான்
சாய்ந்ததா
இல்லையா என யாருக்குத் தெரியும்?

இங்கு பேயோன் அவர்களின் கவிதையை குறிப்பிட விரும்புகிறேன்.

மழை பெய்கையில்
உன் ரம்மிய நினைவு.
மழை நின்றுவிட்டால்
யாரம்மா நீ?

மழையும் நிற்கிறது. மரமும் நிற்கிறது
இங்குதான் இந்த கவிஞர்கள் நிற்கிறார்கள்.

அடுத்த கவிதை இரண்டாக இருந்தாலும் சேர்த்தும் பார்க்கலாம்.
**********************************
தேடுகிறேன்

தொலைத்த காதலை

கடற்கரை மணலில்


திரும்பப் போகத் தானா

அடித்துக் கொண்டு வருகிறது

அலை

********************************************************

காதலை சொன்ன இடத்தில் தொலைத்துவிட்டு தேடுவது பொருத்தம்.

ஒருவேளை மணலில் எழுதிய கவிதையாக இருந்திருக்குமோ இந்தக் காதல்?

அல்லது, அடுத்த வரிகளைப் பார்க்கும்போது அலை வருவதே தொலைத்த காதலை தேடத்தானோ?

அது சிலப்பதிகாரக் காதலோ?

ஒரு மிகப் பெரிய ஜென் தத்துவமும் இதில் ஒளிந்துள்ளது. எவ்வளவு பேருக்கு புரியும் எனத் தெரியவில்லை. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
காதலைச் சொல்லும் (வெளிப்படுத்தும்) வரை இருக்கும் காதல்
சொன்ன பின்னர் (வெளிப்படுத்திய பின்னர்) தொலைந்து விடுகிறது.

இனி கடைசிக் கவிதை தனியாக பார்த்தால்.
உடனே ஏன் திரும்ப வேண்டும்?
வரும்போது ஏன் இந்த ஆர்பாட்டம்?

அடடா
இப்போதுதான் புரிகிறது.

இங்கு எழுதியது முழுவதும் ஒரே கவிதை !

கோவலன் காலத்திலிருந்து
கேள்விக்கு விடை தெரியாமல்
நின்று கொண்டே இருக்கிறது
சாட்சியாக மரம்.

அந்தக் கேள்விக்கு பதில் சொல்லத்தான்
அடித்து கொண்டு வருகிறதா அலை?

காதலை இழந்த பிறகு இழக்க என்ன இருக்கிறது
என திரும்ப செல்கிறதோ?

தொலைத்த காதலை
கடற்கரை மணலில் தேடித் தேடி

திரும்பச் செல்லும் அலைக் கைகளை உடைய
கடல் (/காவிரித்) தாயே உனக்கு என் வணக்கம்.

மற்ற கவிதை வரிகளை பின்னர் பார்ப்போம்.
அதிலும் இந்தக் கருத்துக்கள் தொடர்வதுதான் சிறப்பு.
மேலும் பார்ப்பேன்.
நட்பாஸிற்கு நன்றி.

புதன், 24 நவம்பர், 2010

கவிதை வாங்கி வந்தேன் - நந்தவனத்தில் ஒரு ஆண்டி - இறுதிப் பாகம்.

இது இறுதிப் பாகம். மற்ற பாகங்களைப் படிக்க இங்கே செல்லவும்.

 நந்தவனத்தில் ஒரு ஆண்டி  -1 

நந்தவனத்தில் ஒரு ஆண்டி - 2 

 நந்தவனத்தில் ஒரு ஆண்டி - 3


நம்ம நட்பாஸ் இருக்கிறாரே. அவர் ஒரு பதிவரின் வலைப்பூவில் கர்மாவைப் பற்றி எழுதியதைத் தற்செயலாக இன்று படிக்க நேர்ந்தது. அதில் உள்ள ஒரு பின்னூட்டம் என்னைக் கவர்ந்தது. நம்ம தலைவரின் பாடல் வரிகள்தான். கவிஞர், பாடகர் எல்லாம் முக்கியமில்லை.

பாடல் வரிகளைப் பார்ப்போம்.
“காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்?”

மேலே தொடருமுன் இன்னொரு விளக்கம். நம்ம நட்பாஸ் கவிதையைப் பற்றி மெனக்கெட்டு விளக்கி எப்படி படிக்க வேண்டும் என்றெல்லாம்... வேண்டாம். இந்த பதிவுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. எனவே அந்தப் பதிவு பற்றிய சுட்டியைத் தவிர வேறு எதுவும் இங்கு அதைப் பற்றிக் குறிப்பிட போவதில்லை. சிறந்த கட்டுரைகளில் ஒன்றான அதைப் படிக்க இங்கே, மற்றும் இங்கே செல்லவும்.

சரி.

பாடலைப் பார்ப்போம்.

‘காற்று வாங்கப் போனேன்’

மனிதனின் மூச்சு பற்றி திருமூலர் அழகாக விளக்கியிருப்பார். பிரணாயாமம் பற்றி திருமந்திரத்தில் தெளிவாக உள்ளது. அதைப் பற்றி திருமந்திரத் தொடரில் விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

காயமே இது பொய்யடா! காற்றடித்த பையடா என்று சித்தர்கள் சொல்லும் காற்றைப் பற்றி இங்கே சிந்தித்துப் பார்க்கலாம்.

என்னங்க கடற்கரையில் காற்று வாங்கப் போனதை இப்படியா தத்துவம் என்கிற பேரில் அர்த்தம் கொள்வது என்று சண்டைக்கு வரும் அன்பர்களே, ஒரு நிமிடம் கவனியுங்கள். விட்டால் இப்போதைய உலகில் காற்றில் மாசு பரவி வரும் விகிதத்தில், மினரல் வாட்டர் விற்பது போல் பிராணவாயுப் பைகளையும் விற்கும் காலம் விரைவில் வரும். (இப்போதே அங்கங்கே மலைப் பிரதேசங்களில் உதாரணமாக சபரிமலையில் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்காக ஆக்ஸிஜன் அறைகள் கட்டப் பட்டிருக்கின்றன. எனவே, உயிருடன் இருப்பதற்காக காற்று வாங்கி வரும் காலம் வரும்.

‘ஒரு கவிதை வாங்கி வந்தேன்’

காற்று வாங்கப் போன இடத்தில் காற்று வாங்காமல் கவிதை வாங்கி வந்தால் என்ன பொருள்?

நீ பிழைக்க சுத்தமான காற்று கிடைக்கவில்லையென்றால் இந்தா இந்த கவிதை, எடுத்துப்
போ. உன்னை பிழைக்க வைக்கும் என்று பொருளா?
உயிரைக் காக்கும் கவிதை உன்னதக் கவிதை அல்லவா?
உயிரைப் பிழிந்து எழுதியக் கவிதை உண்டு. உயிரைப் போக்கிய கவிதை எங்காவது உண்டா? அறம் வைத்துப் பாடிய பாடல்களால் உயிர் போனது உண்டு. ஒரு பாடல் வகையினால் அமைந்தப் பாடல் வரிகளைக் கேட்பதற்காகவே இறந்து விட்டதாக நாடகம் ஆடி பாடலைக் கேட்டு இறந்த மன்னனும் உண்டு.

காற்றே ஒரு கவிதைதானே?

தென்றலாய் ஒரு வரி
புய்லாக ஒரு வரி
குளிர்ச்சியாக ஒரு வரி
வெப்பமாக ஒரு வரி என காற்றே ஒரு கவிதையாகத்தான் இருக்கிறது.

கவிதையைப் படிப்பவர் சிலர். கேட்பவர் சிலர். ஆனால் இங்கு கவிதை வாங்கி வரப்படுகிறது.

அந்தக் கவிதை எது? அதை விற்றவன் யார்?

நந்தவன ஆண்டி வேண்டி வாங்கி வந்தது கவிதையா? தோண்டியா?(குடமா)
‘அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்த கன்னி என்ன ஆனாள்’

அட! கவிதையே கவிதையை கேட்டு வாங்கிப் போகிறதே?

இங்கு காற்றும் சுவாசிக்கப்படவில்லை, வாங்கப்படுகிறது

கவிதையும் கேட்கப்படுவதில்லை, காற்று வாங்க்ப் போனவரால் கவிதை வாங்க்ப்படுகிறது.
காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தவரும் கவிதையைப் படிக்கவில்லை. அதையும் ஒரு கன்னி கேட்டு வாங்கிப் போகிறாள்

அந்தக் கன்னியாவது படித்தாளா? அதுவும் தெரியவில்லை. என்ன ஆனாள் என்றே
தெரியவில்லை.

நந்தவன ஆண்டி நாலாறு மாதமாக குயவனை வேண்டி, கேட்டு வாங்கி வந்த தோண்டியையும் சரி, கவிதையையும் சரி கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்ததுதான் மிச்சம்.

நான் சொல்ல முற்படுவது இதுதான்.

கவிதையின் அழகை இரசிப்பதோடு நின்று கொள்ள வேண்டும். மீறி கவிதைக்கு கோனார் நோட்ஸ் போட்டால் கவிதை கவிதையாக இருக்காது. வெறும் வார்த்தைகள்தான் மிஞ்சும்.
எனவே எந்தக் கவிதையாவது படிக்க் நேர்ந்தால் அதனை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளப் போகிறேன். எந்தக் கவிதையையும் ஆராய போவதில்லை. எந்தக் கவிதையையும் படிக்கவும் போறதில்லை.

இது எனக்கு நானே போட்டுக் கொண்ட வேலி. மற்றவர்களைக் கட்டுபடுத்தாது.

காற்றுக்கு என்ன வேலி?
(அட! காற்றைப் பற்றிய அடுத்த தொடர் ரெடி)

திங்கள், 25 அக்டோபர், 2010

அறிவியல் புனைவு

நண்பர் பாஸ்கர் நம் வலைப் பூவிலும் எழுத சம்மதித்துள்ளார்.
பாஸ்கர் எழுதியது
அண்மையில் நான் ஒரு வலைப்பதிவரின் தளத்தில் பின்னூட்டமிட்டேன். கணேஷ் என்பவர் அறிவியல் புதினங்கள் எழுதுகிறார், அவர் தனது தொடர் ஒன்று குறித்து சில விஷயங்களை எழுதியிருந்தார்-


"புதிய ஜீனோ ஜெனடிக் முறையை மேம்படுத்தி அதில் உருவாக்கிய கொஞ்சம் ரொபோடிக் தன்மை கொண்ட நாய்....இனி எழுதப்போகும் சில கதைகளில் இந்த ஜீனோவை அதன் அறிவுத்திறமையை உபோயிக்கலாம் என் நினைக்கிறேன்...

அதாவது கணேஷ் – வசந்த் இவர்களில் கணேஷ் இப்போது கதை எழுதுவதால் அவனுக்கு பதில் இந்த ஜீனோ வசந்தோடு சேர்ந்து கொண்டு தன் வேலையை செய்யும்..ஜீனோவை எப்படி எந்த விசயங்களுக்கு வசந்த் பயன்படுத்திகொள்கிறான் என்பதில் இருந்து புதிய ஜீனோவின் திறமைகள் வெளிப்படும்...

இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள் இருந்தால் எனக்கு சொல்லலாம்....எனக்கு கொஞ்சம் உபயோகமாக இருக்கும்."
இப்படியெல்லாம் கேட்டால் சும்மா விட்டு விடுவோமா? அதையொட்டியே நான் பின்னூட்டமிட நேர்ந்தது. ஆனால் அதன் பின் ஒரு நான்கு மணி நேரத்துக்கு அது குறித்த நினைவாகவே இருந்தது.- தமிழில் அறிவியல் புதினம் எழுதுவதானால் எப்படி எழுத வேண்டும் என்று.

அதற்கு முன் நான் இட்ட பின்னூட்டத்தை சொல்லி விடுகிறேன்-
நல்ல முயற்சி நண்பரே, ஓரிரு வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன்.

robotics, genetics இரண்டையும் இணைத்து ஜீனோவை உருவாக்க நினைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கூடவே கொஞ்சம் biomimetics http://en.wikipedia.org/wiki/Biomimicry என்ற துறையையும் சேர்த்துக் கொள்ளலாமே?

இதுவரை தமிழில் யாரும் இதை செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

சுஜாதாவிடம் சிறப்பான விஷயம் முதலாவதாக அவரது மொழி நடை. அடுத்தது, அவர் புதிது புதிதாக எங்கெங்கிருந்தோ விஷயங்களைக் கொண்டு வருவார்.

துணிச்சலாக இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண என் வாழ்த்துகள்.

இவ்வளவுதானா விஷயம்?

ஏறக்குறைய ஆம் என்றுதான் நினைக்கிறேன்.

பொதுவாக இன்றைக்கு சுஜாதாவுக்கே கெட்ட பேர் வந்து விட்டது. அதிலும் ஒருத்தர் சுஜாதாவைப் போல் எழுதக் கிளம்பினால் அவரை வாழ்த்தி வழி அனுப்பும்போது, புறநானூற்றுப் போருக்கு பிள்ளையை அனுப்புவாளே, அந்தத் தாயின் நினைவு வருகிறது. எல்லாரும், "நீ சுஜாதா மாதிரி எழுதாதே," என்றுதான் சொல்கிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு- ஒன்று, அவரை நினைவுபடுத்துகிற மாதிரி எழுதினால் நம் குறைகள்தான் தெரியும். அவரைப் போல் எழுதுவது இன்று வாழும் மனிதர்களில் எவராலும் முடியாத ஒன்று.

இரண்டாவது காரணம்- இது ஒரு எழுத்தாளனுக்கு தனித்தன்மை வராமல் செய்து விடும். ஒருத்தரை காப்பி அடித்து எழுதுவதில் என்ன பெருமை இருக்கிறது?

முதல் காரணத்துக்கு என் மறுப்பு- நான் சுஜாதா மாதிரி என்ன, என்னை மாதிரி என்ன, எப்படி எழுதினாலும் அது மோசமாகத்தான் இருக்கும்.

இரண்டாவது காரணத்துக்கு என் மறுப்பு- ஒருத்தர் எழுத ஆரம்பிக்கும்போது மற்றவரின் நடையை, அவரது பார்வையை ஒட்டி எழுதினால் தப்பில்லை. பாட்டு விஷயத்தில், நடன விஷயத்தில் இப்படித்தான் நடக்கிறது. ஏறத்தாழ எல்லா கலைகளிலும் ஆசான் ஒருவரைப் பிரதி எடுத்துத்தான் பழகுகிறார்கள். இதை நன்கு பழகிய பிறகுதான் தனக்கென்று ஒரு பாணியில் தேர்ச்சி பெறுகிறார்கள்.

ஆனால் அதற்காக கணேஷ், வசந்த், ஜீனோ என்று எழுத வேண்டிய அவசியமில்லை- சொல்லப்போனால் அது காப்புரிமை மீறலாகவும் இருக்கக்கூடும். எனவே இதைத் தவிர்ப்பது நல்லது.

மொழி நடை பற்றி சொல்லி விட்டேன். புதிய விஷயங்களைக் கொண்டு வந்து தருவது?

சுஜாதா அசகாய சூரர். அந்த காலத்திலேயே உலகில் புதிதாய் நடக்கிற, கவனத்தில் இருக்கிற விஷயங்களை தமிழுக்குக் கொண்டு வந்து கொடுக்கக் கூடிய அறிவு அவருக்கு இருந்தது- அதையும் அவர் வசீகரமான நடையில் செய்தார்.

நமக்கு இணையம் இருக்கிறது- தினமும் குறைந்தது ஒரு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் இணையத்தில் இதற்கென மெனக்கெட தயாராய் இருந்தால் எந்த விஷயத்தையும் சூடு ஆறுவதற்கு முன்னமேயே தெரிந்து கொண்டு விடலாம்.



அந்த வகையில் நான் இதை எல்லாமாவது பதிவோடையைப் பயன்படுத்தி வாசிக்கலாம் என்று சொல்வேன்-

New Scientist online news- http://www.newscientist.com/ வாரம் 72 பதிவுகள்.
IEEE Spectrum - http://feeds2.feedburner.com/IeeeSpectrum வாரம் 29 பதிவுகள்.
Wired top stories- http://feeds.wired.com/wired/index வாரம் 140 பதிவுகள்.
Slashdot: science- http://rss.slashdot.org/Slashdot/slashdotScience வாரம் 34 பதிவுகள்.
Science Daily - http://www.sciencedaily.com/rss/newsfeed.xml வாரம் 305 பதிவுகள்.
TED http://feeds.feedburner.com/TEDTalks_video வாரம் 5 பதிவுகள்.

அறிவியல் உலகில் எந்த புதிய, முக்கியமான விஷயமாக இருந்தாலும் அது நம் கண்ணில் படாமல் போகாது. இதைத் தெரிந்து கொள்ள தினம் ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும்.

ஆனால் கற்பனை, கதை பண்ணுவது இது எல்லாம் அவரவர் திறமை மற்றும் முனைப்பைப் பொறுத்தது. இதில் கூட ஒரு இன்ஸ்பிரேஷன் வேண்டுமென்றால் http://sff.alltop.com/ என்ற தளத்தில் ஏராளமான அறிவியல் புனைவு குறித்த விஷயங்கள் இருக்கின்றன. பொழுது போகாத சமயத்தில் இதை நோண்டிக் கொண்டிருக்கலாம்.

ஆனால் எது எப்படியோ, எழுத ஆர்வம், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு, தொடர்ந்த உழைப்பு- இவை இருந்தால் நிச்சயம் நம்மால் நல்ல அறிவியல் புனைவுகள் செய்ய முடியும்.

சுஜாதாவின் சிறகுகளின் பறக்க ஆசைப்படுவதை விட, சுஜாதாவை ஒரு துருவ நட்சத்திரம் போல் வைத்துக் கொண்டால் சரியான திசையில் பயணித்து இலக்கை அடைந்து விட முடியும் என்று நினைக்கிறேன்.

இதை படித்து விட்டு யாரேனும் அறிவியல் கதைகள் எழுத முனைந்தால், அவர்கள் அனைவருக்கும் எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்.

வெள்ளி, 8 அக்டோபர், 2010

அய்யோ ! தீ !! தீ !!! (சவால் சிறுகதை)

இடம்: ஏதோ ஒரு பிக்னிக் ஸ்பாட்
தேதி: 29 - 10 - 2005
(காமினியும், காமினியை காதலித்தவனும் நண்பர்களோடு பிக்னிக் வந்துவிட்டு, தனியாக உட்கார்ந்த படலம்.)
”காமினி”
“ம்”
“முகத்தை காமி நீ”
”முடியாது”
“இந்த காலத்திலே வெட்கமா?”
“ நான்சென்ஸ். வெட்கமாவது ஒன்னாவது? பேசியல் பண்ணியிருக்கிறேன். வெயில் நேரா விழுது.”
”பிக்னிக் வந்துட்டு இப்படி உட்கார்ந்திருந்தா என்ன பேசறது?”
”என்ன முடிவு பண்ணியிருக்க”
“ நீதான் முடிவு எடுக்கணும். தைரியமா, ஆம்பளையா லட்சணமா வந்து பொண்ணு கேளு”
“ நாந்தான் சொன்னேனே. இதில தைரியம் எல்லாம் இல்லை. அப்பாவுக்கு அந்தஸ்து, பணம் முக்கியம். எனக்கு நீதான் முக்கியம்”
“அப்போ கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே”
“சாரி. அம்மா இல்லாத குறையை மறக்க வைத்தவர்”
“காதலியையும் மறக்க சொல்றாரா?”
“இல்லடா. எப்படியும் சம்மதம் வாங்கிருவேன். பொறுத்துக்கோ”
கடிகாரத்தைப் பார்த்து, “மூணு வருடம் இரண்டு மாசம் மூணு நாள் பொறுத்தாச்சு” என்றாள்.
“ஒரு அஞ்சு நிமிஷம் முகத்தை மூடிகிட்டு இப்படியே இரு”
“அட அதுக்குள் சம்மதம் வாங்கிருவியா”
“ஒரு காளான் பூரி வாங்கிட்டு வந்துருவேன்”
“சே”
அவன் இடத்தை விட்டு நகர்ந்த நான்காவது நிமிடம் அது நடந்தது.
***********
இடம்: அதே பிக்னிக் ஸ்பாட்
தேதி : 29 - 10 - 2005.அதே தேதி
(ஒரு குழந்தையின் தந்தையும், ஒரு தந்தையின் குழந்தையும் விளையாடிக் கொண்டிருந்ததை தந்தை நினைத்த படலம்.)
”அப்பா நான் கண்ணை மூடிக்கிறேன். நீ போய் அதை ஒளிச்சு வை”
“சரிம்மா. நான் போய் ஒளிச்சு வச்சுட்டு வரேன். அதுவரைக்கும் கண்ணை திறக்காதே”
“போப்பா. நீ எங்கே ஒளிச்சு வச்சாலும் நான் கண்டுபிடிச்சுருவேன். நான் போலீசாக்கும்”.
”கண்ணம்மா, இப்போ நீ எங்கே போய் ஒளிஞ்சுகிட்டே. என்னால் பார்க்காம இருக்க முடியலியே” - பிரிய மகளின் இறப்பினை நினைத்து அழுதார் பரந்தாமன்.
************
இடம்: அந்த ஊருதாங்க.
தேதி : 22 - 10 - 2010
(காமினியும், பரந்தாமனும் சிந்தித்த படலம்.)
” உறுதியாகவா?” - கேட்டாள் காமினி.
"ஆமாம்” - என்றார் பரந்தாமன்.
நிச்சயமா தெரியுமா?
”வக்கீல் சொன்னார். தீர்ப்பைத் தள்ளிப் போட முடியாதாம்”.
“இப்போ என்ன பண்றது?”
“காமினி இனியும் தாமதிக்க முடியாது. தீர்ப்பு வெளிவந்தால் இன்னும் குழப்பம்தான். இரண்டு பக்கமும் அப்பீல் செய்கிறேன்னு சொல்லி இன்னும் இழுப்பாங்க. அந்த 2.7 ஏக்கரில் நாம உள்ளே நுழைய முடியாது. என்ன செய்யலாம்?” என்றார் பரந்தாமன்.
”எல்லாம் என்னுடைய தப்புதான். படம் எடுக்கலாம்னு அங்கே போனேன். காமிராவில் பிலிம் மாற்றும்போது விரலில் மாட்டியிருந்த நீ கொடுத்த டைமண்டு மோதிரம் அங்கே விழுந்திருக்கும். வழக்கு நடக்கிறதால போலீஸ் இப்போ யாரையும் உள்ள விடறதில்லை. நான் போனால் எந்த இடத்தில் எல்லாம் நின்னுட்டிருந்தேன்னு ஞாபகம் இருக்கு. அங்கிருந்த புளிய மரத்தடியில்தான் விழுந்திருக்கும். ஈஸியா கண்டுபிடிச்சுடுவேன்” என்றாள் காமினி.
”சரிதான். நீ போலீஸுக்குப் போனாலும் ஏன் அங்கே போனாய்? எதுக்கு படம் எடுத்தேன்னு கேள்வி மேல் கேள்வி கேட்பாங்க. சும்மா ஒரு படம் போட்டு படம் + புதிர் அப்படின்னு மொக்கையா பதிவு போடப் போனேன்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான். வைர மோதிரம் கிடைச்சாலும் போலீஸே எடுத்துகிட்டு கிடைக்கலைன்னு சொல்லிட்டா என்ன பண்றது? ஏதாவது திட்டம் போட்டுத்தான் நாமளே எடுக்கணும்.” என்றார்.
“எனக்கு ஒன்னு தோணுது”
”என்ன?”
”அந்த இடத்தை ஒட்டி ஒரு ஆஸ்பிடல் இருக்கு”.
”சரி”
“ஆபரேசன் தியேட்டருக்கு பின்னாடி ஆம்புலன்ஸ் வந்து போக ஒரு வழி இருக்கு.”
“ஆமா. அதிகமா யாரும் பயன்படுத்தறதில்லை”
“அதையொட்டி இருக்கிற வேலியை எட்டி குதித்தால் அந்த மரம் அருகில்தான்”
“அதுசரி. அங்கே எப்படி போறது?”
”எனக்கு வண்டியில் அடிபட்டு மயக்கம்னு சொல்லி அங்கே என்னை ஆம்புலன்ஸில் எடுத்துட்டுப் போ”
“ சரி, நான் உன்னை முதலில் முன்னாடி கொண்டு போறேன். ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துட்டு போனதும் ஆம்புலன்ஸை பின்னாடி கொண்டு வரேன். அதுக்குள்ளே நீ அந்த இடத்திற்குப் போய் தேடி எடுத்துட்டு வந்திரு”.
“ஆபரேஷன் தியேட்டரிலிருந்து எப்படி தப்பிக்கிறது?”
“மயக்க ஊசி போடற டாக்டர் காசுன்னா மயங்கற ஆளு”.
“அவனை மட்டும் சரிகட்டினா போதுமா”
“போதும். முதலில் மயக்க ஊசி போடற டாக்டர் மட்டும்தான் தியேட்டரில் இருப்பார். அவர் பேஷண்டை மயக்கமடைய செய்துட்டு வெளியே வந்து சொன்ன பிறகுதான் ஸ்பெசலிஸ்ட் மற்றவங்க எல்லாரும் உள்ளே போவாங்க”.
மேலும் விவாதித்தார்கள். காபி குடித்தார்கள். விவாதித்தார்கள். திட்டம் தெளிவானதும், ஆஸ்பிடலுக்கு போனார்கள்.
*************
இடம்: அந்த ஊருதாங்க.
தேதி: 22 - 10 - 2010.
(சிவாவும் ஆதியும் சந்தித்த படலம்.)
“ஏம்பா சிவா, உன்னை காலேஜில் பார்த்தது. இப்போதான் போலிஸ் ஸ்டேஷனில் பார்க்கிறேன்” என்றான் ஆதி.
”ஆமாம். இப்போதான் ட்ரெயினிங் முடிந்ததும் இங்கே போஸ்டிங். ஒரு இடத்திற்கு காவல் நிற்கணும். போரடிக்கிறது” என்றான் சிவா.
”காலேஜில் எப்போ பார்த்தாலும் அட்வெஞ்சர் வேணுமுன்னு சொல்லிட்டே இருப்பே. இப்போதான் நினைவுக்கு வருது. அந்த அட்வெஞ்சருக்கு பிறகு உன் ஆளை நீ பார்க்கலியா?”
“இல்லை. அந்த பிக்னிக்லே ஒரு பிக்பாக்கெட்டு அவளுடைய பர்ஸை பிடுங்கிட்டு ஓடினான். நானும் துரத்தி போய் அவனை அடிச்சு பர்ஸை வாங்கினேன். நீங்க எல்லாரும் பர்ஸிலிருந்த 5 ரூபாயை காட்டி இதுக்கா துரத்திட்டு போனேன்னு சிரிச்சீங்க. 5 ரூபாய்க்கு அவனை பிடிச்சு ஜெயிலில் போட நீ என்ன போலீஸா என்று அவளும் ஏளனமாக சிரித்தாள். ஆனால் அப்போதான் நான் போலீசாகனும்னு நினைச்சேன். 5 ரூபான்னாலும் திருட்டு திருட்டுதானே. உடனே அப்ளை பண்ணினேன். டிரெயினிங்கிற்கு கோவை போனேன். அவளை சந்திக்கவேயில்லை.”
”சரி. பிறகு வீட்டிற்கு வா. நிறைய பேசலாம்”.
“ஓ.கே”
**************
இடம்: நம்ம ஊருதாங்க.
தேதி : 22 - 10 - 2006
(காமினியும் பரந்தாமனும் உரையாடிய படலம்)
”உன்னுடைய பர்ஸை எடுத்துட்டு ஓடிப் போய் அடிவாங்கினேனே. என்னை திருடன்னு நினைச்சியா” என்று கேட்டார் பரந்தாமன்.
“அதான் அப்புறம் வீட்டிற்கு வந்து விளக்கினீங்க்ளே” என்றாள் காமினி.
“அப்போ என்னுடைய ஒரே மகளை விபத்துல பறி கொடுத்துட்டு பித்து பிடிச்சு போயிருந்தேன். என் மகள் மாதிரியே முகத்தை மூடி உட்கார்ந்திருந்ததால என்ன செய்யறோம்னு தெரியாமல் செய்துட்டேன்.”
“எவ்வளவு பணம் இருந்து என்ன பயன். உங்கள் மகளைக் காப்பாற்ற முடியலை. அதான் என்னை மகளாக தத்தெடுத்திட்டீங்க.”
*****************
இடம்: அந்த ஊருதாங்க.
தேதி: 22 - 10 - 2010.
(வாதியும் பிரதிவாதியும் உரையாடிய படலம்).
“இதோ பார். நான் கட்டியிருந்ததை இடிச்சுட்டுதான் நீ கட்டினேன்னு சொல்லி உன்னுடையதை நான் இடிச்சேன். அதுக்கும் இதுக்கும் சரியாப் போயிடுச்சு”
“ஒத்துக்க மாட்டேன். நீ இடிச்சதுக்கு தீர்ப்பு வரட்டும்.”
”மண்ணாங்கட்டி. தீர்ப்பு வந்தால் புதுசா வந்திருக்கானே சொந்தம் கொண்டாடிட்டு. அவனுக்கும் ஒரு பங்கு போயிடும்”
”அப்போ என்ன செய்யலாம்?”
“ நான் சொல்றதை கேளு. அந்த உயிலுதான் எல்லா பிரச்சினைக்கு காரணம். அது அந்த கட்டிடத்தில்தான் இருக்கு. அதை வச்சுதான் அவனும் பங்கு கேட்கிறான். நைஸா உள்ளே புகுந்து கட்டிடத்திற்கு ஒயர் பத்திகிட்ட மாதிரி தீ வச்சுடுவோம். எல்லாம் எரிஞ்சுடும். தீர்ப்பும் நமக்கு சாதகமா வந்ததும் இரண்டு பங்கா சரிபாதி பிரிச்சுக்குவோம். நானே உன்னுடையதை கட்டி தரேன். நீ என்னுடையதை கட்டிக் கொடு.”
”சரி”.
***************
இடம்: அந்த ஊருதாங்க.
தேதி: 22 - 10 - 2010 நள்ளிரவு.
(பரந்தாமன் கதறிய படலம் / எல்லாருமே பதறிய படலம்)
”டாக்டர் சார் ! எப்படியாச்சும் என் காமினியை காப்பாத்திருங்க”. கதறினார் பரந்தாமன்.
” நான் மயக்க ஊசி போடற டாக்டருப்பா”
”பரவாயில்லை. நீங்களும் டாக்டர்தானே. இந்தாங்க பத்தாயிரம். எப்படியாச்சு காப்பாத்திருங்க. எவ்வளவு செலவானாலும் நான் தரேன்”
டாக்டர் பேரில் மட்டுமல்ல மனதிலும் சந்தோஷம்.
“சரி. சரி இங்கே கூட்டம் போடாதீங்க. எல்லாம் முடிஞ்சதும் சொல்கிறேன்.”
டாக்டர் உள்ளே சென்று காமினியைத் தொட்டார்.
”டாக்டர் நீங்க மருந்து கொடுக்க என் கணவர் பணம் தந்தாரா?”
”ஆமா. நேரே படுங்க”
“எனக்கு மருந்து கொடுக்கலைன்னா நாலு மடங்கு பணம் தரேன்”
“அது சரி. உனக்கு வலியில்லையா”
“இல்லை. நான் இப்போ என்ன செய்தாலும் நீங்க பேசாம இங்கேயே இருந்தால் இன்னும் பணம் தரேன்”
1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
அந்த மரத்திற்கு அருகே ஓடினாள்.
ரோந்துக்காக சுற்றி வந்த சிவாவின் கண்ணில் வைரத்தை கையில் எடுத்துக் கொண்டிருந்த காமினி பட்டாள். அருகில் சென்றான்.
”ஓ ! சிவா ! நீயா? எப்படியிருக்கிறே? இது என்னுடைய டைமண்டு. “
”சாரி. நான் பழைய அசட்டு சிவா இல்லை. பர்சில் அஞ்சு ரூபாய்க்கு மேல் வைக்க முடியாத உனக்கு அஞ்சு லட்சம் பெறும் அந்த டைமண்டு உன்னுடையதுன்னு நான் நம்ப தயாரா இல்லை. என்கிட்டே கொடு.”
”என்னை நம்பு. இது 5 ரூபாயில்ல. டைமண்டு. எனக்கு பரிசா கிடைச்சது. இங்கே தவற விட்டுட்டேன்.”
” இப்போ கொடுத்திட்டு நாளைக்கு ஸ்டேஷனில் வந்து வாங்கிக்க”
”முடியாது. இப்போ என்னை விட்டுரு. நாளைக்கு விவரமா சொல்றேன்” கெஞ்சினாள் காமினி.
2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
அப்போதுதான் புகை நாற்றம் அவர்களை கட்டிடத்தை திரும்பி பார்க்க வைத்தது.
“அய்யோ ! தீ ! தீ !
சடாரென சிவா கட்டிடத்தை நோக்கி ஓட காமினி வேலியை நோக்கி தாவினாள்.
********
இடம்: நம்ம ஊருதாங்க
தேதி: 23 - 10 - 2010.
(தொலைத்தது கிடைத்ததும் கிடைத்ததை தொலைத்த படலம்).
3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
’இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டேன். அந்த டைமண்டைத் தொலைச்சுட்டேன்.” என்று மனதிற்குள் நினைத்து அழுதாள் காமினி.
முற்றும்.

வியாழன், 17 ஜூன், 2010

வள்ளுவர் குறிப்பிட்டது நர்ஸைய்யா, கம்பவுண்டரையா?

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்(று)
அப்பானால் கூற்றே மருந்து.

என்ற குறள் கூறும் கருத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கீழ்க்கண்ட சுட்டிகளில் கூறப்பட்டுள்ளது.
http://vaarththai.wordpress.com/2010/06/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D/

http://vaarththai.wordpress.com/2010/06/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D/

பரிமேலழகரின் முழுமையான உரை கீழே அனைவரும் புரியும் வண்ணம் எளிமையான
தமிழில் தரப்பட்டுள்ளது.
மருந்து – நோய்க்கு மருந்தாவது
உற்றவன் – அதனை உற்றவன் (அதாவது நோயுற்றவன்)
தீர்ப்பான் – அதனைத் தீர்க்கும் மருத்துவர்
மருந்து - அவனுக்கு கருவியாகிய மருந்து
உழைச் செல்வான் என்ற அப்பால் நாற்கூற்று – அதனை நேரம், அளவு தவறாமல் நோயாளிக்கு தருபவன் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது.

நான்கு என்ற எண் வருகிறதால், அப்பால் என்று கூறினார். நான்கு கூறு என்பதன் விளக்கம்.

உற்றவன் வகை நான்கு – 1) பொருளுடைமை 2) மருத்துவன் கூறியபடி நடத்தல் 3)நோயின் நிலை உணரும் சக்தி 4)மருந்தினால் ஏற்படும் விளைவுகளையும், துன்பத்தையும் பொறுத்தல்.

தீர்ப்பான் வகை நான்கு – 1) நோய்கண்டு அஞ்சாமை 2) கல்வியும் நுண்ணறிவும் இருத்தல். 3) மிகுந்த அனுபவம் 4) மன சுத்தம், உடல் சுத்தம், வாக்கு சுத்தம் கொண்டவராய் இருத்தல்.

மருந்தின் வகை நான்கு – 1) பல விதமான நோய்களுக்கும் ஏற்றதாக இருத்தல் 2)சுவை, வீரியம், விளைவு முதலியவற்றில் மேம்பட்டு இருத்தல் 3)எளிதாக நோயாளிக்கு தரும்படி இருத்தல் 4) குறிப்பிட்ட நோய்க்கு பொருத்தமானதாய் இருத்தல்.

இயற்றுவான் வகை நான்கு – 1) அன்புடையவராயிருத்தல் 2) மனம், வாக்கு, உடல் சுத்தமாயிருத்தல் 3) மருத்துவர் கூறியவாறு மருந்தை அளித்து, நோயாளியை பராமரித்தல் 4) மருத்துவ அறிவுடையவராய் இருத்தல்.

இவையெல்லாம் ஒன்று இணைந்தால் ஒழிய நோய் தீராது என்பதால் இத்தொகுதியையும் மருந்து என்றார்.

பரிமேலழகர் மருந்தினைப் பிழையாமல் இயற்றுவான் என்று கூறுகிறார். இதற்கு பல பொருள் இருந்தாலும் இங்கு கூட இருந்து உதவுபவரைக் குறிக்கிறது என்பதற்கு ஆதாரம் பழைய உரைகளில் இருக்கிறது.
அதாவது பரிகாரம் பண்ணுபவன் என்பார் பரிப்பெருமாள். நோயாளிக்கு கூட இருந்து உதவுபவன் என்பது காளிங்கரின் உரை. பரிமேலழகருக்கு அடுத்ததாக சிறந்து விளங்குவது காளிங்கரின் உரை என்பதால் அவரது உரையே சரி என ஏற்கிறேன். இங்கு நர்சைத் தான் குறிப்பிடுகிறார். மருந்தை தயாரிப்பவர் அல்ல.

சனி, 12 ஜூன், 2010

நானும் இயற்றுவேன் செந்தமிழ் பாட்டு

ஒரு அமெரிக்க கவிதை தழுவல்

I, Too, Sing America by Langston Hughes
I, too, sing America.

I am the darker brother.
They send me to eat in the kitchen
When company comes,
But I laugh,
And eat well,
And grow strong.

Tomorrow,
I'll be at the table
When company comes.
Nobody'll dare
Say to me,
"Eat in the kitchen,"
Then.

Besides,
They'll see how beautiful I am
And be ashamed--

I, too, am America.


நானும் இயற்றுவேன்
செந்தமிழ் பாட்டு

பச்சைத் தமிழனய்யா நான் !
எள்ளி நகையாடி என்னை
தூக்கி எறிகிறவர்களே
சிரிக்கிறேன் உம்மை பார்த்து.
விரிக்கிறேன் என் கடையை

நாளை வரும்
எவரும் இசையமைக்க வருவார்
சுட்டி காட்ட முடியாது
எந்த நக்கீரனாலும்
கூட

பின்னர்
பாருங்கய்யா
என் செந்தமிழ் அழகை
நானும் இயற்றுவேன்
செந்தமிழ் பாட்டை
பச்சைத் தமிழனய்யா நான் !

பின்குறிப்பு: சத்தியமாக யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள்தான் உரிமையாளர்.

மேலும் ஒரு மொழி பெயர்ப்பு

ஒரு ருஷிய கவிஞரின் கவிதை வரிகளை இணையத்தில் படிக்க நேர்ந்தது.
தமிழில் தழுவி எழுத முயற்சித்தேன்.
சொற்குற்றம், பொருட்குற்றம் இருப்பின் மன்னிக்கவும்.
ஆங்கில மொழிபெயர்ப்பும் எனது தமிழ் தழுவலும்

I Don't Know If You're Alive Or Dead by Anna Akhmatova
I don't know if you're alive or dead.
Can you on earth be sought,
Or only when the sunsets fade
Be mourned serenely in my thought?

All is for you: the daily prayer,
The sleepless heat at night,
And of my verses, the white
Flock, and of my eyes, the blue fire.

No-one was more cherished, no-one tortured
Me more, not
Even the one who betrayed me to torture,
Not even the one who caressed me and forgot.


இருக்கிறாயா? இல்லையா?
தெரியாது எனக்கு
எங்கே இருப்பாய்?
உலகில் எங்கேயோ,
அல்லது என் எண்ணத்தில் மட்டுமா?
தெரியாது எனக்கு.

அனைத்தும் உனக்கே.
என் தினசரி பிரார்த்தனையும்,
தூக்கமற்றதால் உஷ்ணமான இரவுகளும்
வானத்தில் பறக்கும் புறாக் கூட்டமாய்
வெள்ளை காகிதத்தில் எழுதிச் செல்லும்
என் கவிதை வரிகளும்,
நெருப்பில் உள்ள நீலமாய் என் விழிகளும்
அனைத்தும் உனக்கே

வேறு யாரும் இல்லை
என்னை
விரும்பி கொல்லவோ,
கொல்ல விரும்பியோ
வேறு யாரும் இல்லை
உன்னை விட
என்னை
நம்பிக்கை துரோகம் செய்து வதைத்தவர் கூட
உன்னை விட
என்னை ஆவலுடன் தழுவ வந்து
தழுவி பின் மறந்து செல்லும் தென்றலைப் போல்
வேறு யாரும் இல்லை
உன்னை விட
- கோ.சு.வீரராகவன்

திங்கள், 10 மே, 2010

எனக்கு பிடித்த கவிதை

இந்த கவிதையை தந்த அருமை நண்பன் பாஸ்கருக்கு நன்றி
"மிறாபு பாலத்தின்கீழ் செல்கிறது சீன் நதி
அதையொத்து இசைகிறது நம் காதல்கள்
அவசியமாய் நான் நினைவுறுத்திக் கொள்கின்றேன்
எப்போதும் துன்பம் கடந்தபின் இன்பம்

தொடரும் இரவுகள் மணியோசை ஒலிக்க
செல்கின்றன நாட்கள் இருக்கின்றேன் நான்

கையோடு கை கோர்த்து முகத்தை முகம் நோக்க
நாம் நிற்கையில் நம் கைகள்
பிணைத்த பாலம் அதன் கீழ்
களைத்த அலைகள் முடிவற்ற காட்சி

தொடரும் இரவுகள் மணியோசை ஒலிக்க
செல்கின்றன நாட்கள் இருக்கின்றேன் நான்

ஓடும நதி போல் விட்டுப் போகிறது காதல்
காதல் போகிறது
மெல்ல அடங்கும் நம் வாழ்க்கை
உக்கிரமாய்த் தாக்கும் நம்பிக்கை

தொடரும் இரவுகள் மணியோசை ஒலிக்க
செல்கின்றன நாட்கள் இருக்கின்றேன் நான்

நாட்கள் போம் வாரங்கள் போம்
இழந்த காலம் கழிவது கிடையாது
திரும்புவதில்லை கடந்த காதல்கள்
மிறாபு பாலத்தினடி செல்கிறது சீன் நதி.

வெள்ளி, 5 மார்ச், 2010

அத்தியாயம் 1 மனிதனும் வாய்ப்பும்

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று - குறள்.

எந்த ஒரு மனிதனும் உலகில் பிறக்கும்போதே தனக்கான ஒரு வேலை இல்லாமல் பிறப்பதில்லை என்று லோவெல் கூறுகிறார்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும்.
யாரேனும் ஒருவர் இயக்காமல் உலகில் எந்த பொருளும் தானாக இயங்குவதில்லை என்று காஸ்ஃபீல்டு உரைக்கிறார்.


இதற்கு முன்னும் சரி, பின்னும் சரி, இனி ஒரு நாள் இதைப்போல் இருக்க முடியாது என்பது போல் ஒரு சிறந்த நற்செயல் செய்வதற்கு வாய்ப்பு வழங்காத நாள் எதுவும் இல்லை என்கிறார் பர்லே.

இந்த வாக்கியம் சற்று குழப்பமானது. விரிவாக பார்ப்போம்.

ஒன்றே செய்,
ஒன்றும் நன்றே செய்
நன்றும் இன்றே செய்
இன்றும் இன்னே செய் என்று கபிலர் கூறுவார்.

நல்லதை செய்வதற்கான வாய்ப்பு அமையாத நாளே இல்லை என்று பர்லே கூறுகிறார்.
நாம் என்ன நினைக்கிறோம்? அப்படிபட்ட நாளே மிகவும் அரியது என்று நினைக்கிறோம்.
இதனைத் தான் வள்ளுவரும்
எய்தற்கு அரியது இயைந்தக் கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்
என்கிறார் என நினைக்கிறோம்.
இது தவறு. நல்லதை செய்வதற்கான வாய்ப்பு அரியது என்று நினைக்கிறோம். அதற்காக குறளை மேற்கோள் காட்டுகிறோம்.
ஆனால் குறள் கூறுவது என்ன?
செய்தற்கு அரிய செயலையும் செய்வதற்கான மனத் திட்பம் அரிது. அத்தகைய மனத்திட்பம் உடைய நிலையே செய்தற்கு அரிய செயலையும் செய்யும் நிலை என்று பொருள் கொள்ள வேண்டும்.
இப்போது பர்லே என்ன சொல்ல வருகிறார்?
அத்தகைய செயலை செய்ய முடியாத நாள் என்று கிடையாது. இந்த தருணம் கழிந்தால் பிறகு மீள்வதில்லை. எனவே வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். இது போல் இன்னும் சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்த்து வாய்ப்பை நழுவ விடுவதோ, இதற்கு முன்னர் அமைந்த வாய்ப்பு அளவிற்கு இப்போது அமையவில்லை என்று பழங்கதை பேசி வாய்ப்பை தட்டி கழிப்பதும் சரியில்லை என்கிறார்.
சரிதானே?

முண்ணனியில் இரு

முண்ணனியில் இரு - ஆரிசன் ஸ்வெட் மார்டன் எழுதிய நூல் எனக்கு மிகவும் பிடித்த நூல். எனக்குள் பல பாதிப்புகளை ஏற்படுத்திய அந்த நூலை தமிழில் சி.ஆர்.ரவீந்திரன் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து கண்ணதாசன் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.
அதனை மேலும் விரிவாக ஆராய்ந்து விரித்து எழுத நினைத்துள்ளேன். அதன் தழுவல் என்பதால் திரு.காந்தி கண்ணதாசன் அவர்கள் பதிப்புரிமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்பதால் அன்னாருக்கு இதன் மூலம் ஒரு வேண்டுகோள்.
இந்த பதிவுகள் லாப நோக்கமின்றி அனைவருக்கும் கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் குறிப்பிடப் பட்டுள்ள நூலின் ஆங்கில மூலத்திலிருந்து மட்டுமே எடுத்து  (முன்னுரை - முதல் இடுகை தவிர்த்து) மொழிபெயர்த்து மேலும் சில இசைந்த கருத்துக்களுடன் இணையத்தில் மட்டுமே வெளியிடுகிறேன். எனவே இதிலிருந்து யாரேனும் பயன்படுத்த விரும்பினால் கண்ணதாசன் பதிப்பகத்தாரை அணுகி முறையாக அனுமதி பெறவும். நன்றி.