சனி, 19 பிப்ரவரி, 2011

எழுதாப் பொருளைப் பேசத் துணிந்தேன்

இந்த வலைப்பூ தொடங்கியதன் நோக்கமே எளிய தமிழில் இலக்கியங்களை சாதாரண வாசகருக்கு அறிமுகப் படுத்துவதுதான்.
இதன் தொடர்ச்சியாகவே, திருக்குறளைப் பற்றி, கீதை, கவிதை, கட்டுரை என எழுதத் துவங்கினேன்.
இதன் அடுத்த கட்டமாக சிவஞான முனிவர் இயற்றிய சிவஞான மாபாடியத்தை படித்துக் கொண்டிருந்த போது சில கருத்துகளில் பாட பேதங்கள் இருப்பதாக அடியேன் அறிவுக்கு புலப்பட்டது.
அதைப் பற்றி எழுதுவதன் மூலம் ஆன்ற அறிவுடைய சான்றோர் படித்து மேலும் விளக்கம் தருவர் என நினைக்கின்றேன். இதை அதிக பிரசங்கித்தனம் (தக்க தமிழ் சொல் நினைவுக்கு வரவில்லை) என்று எண்ண வேண்டாம். விளக்கம் தருவோர் இதனைக் கருத்தில் கொண்டு என்னை பொறுத்தருள்க.

அதில்,
“இவ்வத்துவிதம், ஏனையோர் கூறும் அத்துவிதம் போலக் கேவலம் என்றாதல், விசிட்டம் என்றாதல், மறுதலை என்றாதல், யாதானும் ஒன்றான் விசேடிக்கப்பட்டு நின்று பொருள் உணர்த்தாது, சுத்தமாய் நின்றே பொருள் உணர்த்துதலிற் சுத்தாத்துவிதம் என வழங்கப்படும். ஈண்டுச் சுத்தம் என்றது யாதானும் ஒன்றான் விசேடிக்கப்படாது நிற்றலை. அது “விசிட்டசத்தை”, “சுத்தசத்தை” எனத் தார்க்கிகர் கூறும் வாய்பாட்டானும் அறிக. ஏனையோர் கூறும் அத்துவிதம் கேவலம் முதலியவற்றான் விசேடிக்கப்படாத வழி அவர் கூறும் பொருள் தருதற்கு ஏலாமையின், அவையெல்லாம் சுத்தாத்துவிதம் ஆகாமையும் காண்க.” என்று விளக்குகிறார்.
குறிப்பு மேற்கண்ட பத்தி சாதாரணமான வாசகருக்கு புரிதல் கடினம். எனவே சுருக்கமாக விளக்குகிறேன்.
த்வைதம் என்கிற தத்துவம் அத்வைதம் போல, விசிட்டாத்வைதம் போல மற்றொரு தத்துவம் என்று கூறுகிறார். கேவலம், சுத்தம் என்பதன் பொருளை பின்னர் விரிவாக விளக்குகிறேன். ஏன் எனில் இங்கு சுத்தம் என்பது எதனையும் விசேடிக்கப்படாமல் நிற்றல். ஆதலால் அத்வைதம், விசிட்டாத்வைதம் முதலியவை சுத்தாத்துவம் ஆகாது என்கிறார்.

இனி கீழ்க்கண்டவாறு விளக்கம் கொள்கிறேன்.
முனிவர் கேவலமான த்வைதம் என்றும் கூறும் நெறியைக் கற்பித்த சங்கரர் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு அல்லது அதற்கு பிற்பட்ட காலத்தில் வாழ்ந்தார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மற்ற அத்வைதம் போல சுத்த த்வைதம் பெறவில்லை என்று முனிவர் கூறுதலால் சுத்தாத்வைதம் ஏனைய நெறிகளுக்கும் பிற்பட்டதாகக் கருதப்படும்.
ஆகையால் சுத்தாத்வைதம் மிக அண்மைக் காலத்தது என்று முடியும். இது உண்மையல்ல.

சுத்தாத்துவிதம் என்று சைவர்களும், விசிட்டாத்வைதம் என்று வைணவர்களும் கூறிக் கொள்கின்றனர். அது போல் கேவலாத்துவிதம் எனவோ, மறுதலை (மறுதலை என்பது இதற்கு மாறுபாடான ஒன்று எனலாம்) அத்வைதம் எனவோ மற்றவர்கள் கூறுவதில்லை. அந்தந்த தத்துவ நெறிகளைக் கூறியவர்களும் இச்சொற்களை பயன்படுத்தியிருக்க வேண்டும். இல்லையெனில் கேவலாத்துவிதம், மறுதலை அத்துவிதம் எனக்கூறுதல் படைத்து மொழிதல் என்னும் குற்றமாகும் என்பதே எனது துணிபு.

அதுமட்டுமல்ல, கேவலம் என்பதால் கூறிய முறை என வாதிடுவோர் அத்துவிதம் என்னும் சொல்லை கூறுதல் எங்ஙனம்? அது இன்மைப் பொருளைக் குறிக்கும் என்று ஏற்றுக் கொண்டாலும், ‘இரண்டும் இல்லை’ என்ற பொருளைத் தருமே அன்றி வாதிடுவோர் கூறும் அத்துணை விரித்த பொருளைத் தராது. எனவே கேவலம் என்னும் அடைமொழிக்கும் பயன் இல்லை.

அன்றியும் ‘சுத்தாத்துவிதம்’ என்பதில் இருக்கும் ‘சுத்தம்’ என்னும் சொல் தூய்மையானப் பொருள் என்கிற அடைமொழி அன்று. அவ்வாறெனில், பிரம்மம் ஒன்றே உண்மைப் பொருள் அதற்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை என்பதனால் அத்துவிதம் என்பதன் பொருளும் இதுவே ஆதல் வேண்டும் என்கிற வாத நிலைக்கே அத்தகைய கூற்று பொருள் தரும்.

அடுத்த இடுகையில் மேலும் தொடர்கிறேன்.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதிலே....

நட்பாஸின் கட்டுரை தக்க சமயத்தில் வந்திருக்கிறது. முதலில் அதற்கு ஒரு பின்னூட்டம் போடலாம் என்றுதான் நினைத்தேன். அது நீண்டுவிடும் எனத் தோன்றியதால் இந்த பதிவு.
முதலில் இரு விஷயங்கள்.
ஒன்று அந்தப் பதிவை பாராட்டுவதற்காக இதை எழுதவில்லை. அதிலுள்ள சில கருத்துக்கள் எனது மனதில் வெகு காலம் இருந்து வந்து நட்பாஸ் எழுத்து வடிவம் கொடுப்பதற்காக காத்திருந்ததோ எனத் தோன்றுகிறது.
இரண்டு எனது பலவீனங்களை வெளிபடுத்தியோ யாரையும் புண்படுத்தும் நோக்கிலோ இந்த பதிவு எழுதவில்லை.
எதற்காக இந்த பீடிகை என்பது முழுவதும் படித்தால் விளங்கும்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி.
திருப்பூரில் பாரதியாரின் நினைவு நாளையொட்டி ரோடரி சங்கத்தினர் பள்ளிகளுக்கிடையேயான கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகளை நடத்தினர். இதில் நடுவர்களில் ஒருவராக இருக்க எனக்கு அழைப்பு வந்தது. தமிழில் எனக்கு இருந்த ஆர்வத்தினால் உடனே ஒப்புக் கொண்டேன். பிறகுதான் தெரிந்தது. என்னை பேச்சு போட்டியிலும் இசை போட்டியிலும் நடுவராக போட்டிருந்தார்கள்.

இசை போட்டியில் என்னுடன் அமர்ந்த மற்ற இருவரும் முறையாக சங்கீதம் கற்றவர்கள். வித்வான் பெண்மணிகள். பங்கேற்ற திருப்பூர் மாணவ மாணவியர் அனைவருமே நன்றாக பாடினர். முதல் இடத்திற்கும் மூன்றாம் இடத்திற்கும் இரண்டு இரண்டு பேர்களைத் தேர்வு செய்தேன். எனவே பிறகு மற்ற நடுவர்களோடு கலந்து ஆலோசித்து ஒவ்வொரு இடத்திற்கும் ஒருவ்ரை மட்டும் தேர்ந்து எடுத்து மற்றவ்ரை பட்டியலிலிருந்து நீக்கினோம். இவ்வாறு நீக்கப்பட்டவர்கள் சரியாக பாடவில்லை என்று பொருள் இல்லை. தேர்ந்து எடுக்கப்பட்டவர்களை விட அதிகமாக தவறு செய்தனர் என்பதுதான் காரணம்.

அது மட்டுமல்ல மற்றவர்களுக்கு நான் போட்டிருந்த மதிப்பெண்களுக்கும் மற்ற இரு நடுவர்களின் மதிப்பெண்களுடன் அப்படியே ஒத்து போயிற்று. முக்கியமான விசயம் என்னவென்றால் முதல் இடத்திற்கும், மூன்றாம் இடத்திற்கும் நான் தேர்வு செய்தவர்கள் எந்த எந்த இடங்களில் பாடுவதில் தவறு செய்தார்கள் என்பதை மிகவும் சரியாக என்னால் குறிப்பிட முடிந்தது. அது என்ன வகையான தவறு என்பதை சங்கீத அறிவு உடைய அந்த இரு நடுவர்களும் விளக்கினார்கள்.

என் மனைவியும் என் மகனும் இன்று வ்ரை என்னை கிண்டல் செய்து வியந்த விசயம் என்னவென்றால் என்னை எப்படி நடுவராக போட்டார்கள் என்றுதான்.
காரணம் என்னால் சுமாராக கூட பாட வராது என்பதுதான். என் மனைவியும் மகனும் அருமையாக பாடக் கூடியவர்கள்.
ஆனால் அவர்களுக்கு ராகங்களின் பெயர்கள், சரளி வரிசை, தாள வகைகள் தெரியாது. நானோ ராகங்களின் பெயர்கள், தாள வகைகள் பற்றி படித்திருக்கிறேன்.

இன்றுவரை ஏன் ஒரு முறை நான் பணியாற்றிய கல்லூரியில் ஒன்றில் கூட மீண்டும் இத்தகைய வாய்ப்பு வந்து நடுவராக நான் பணியாற்றியது சரியா என்று எனக்கே நான் கேட்டுக் கொள்வேன். என்னால் தம் கட்டி ராகத்துடன், தாள சுதியோடு பாட முடியாத போது நடுவராக எனக்கு என்ன தகுதி, முறையா? என்று என்னை நானே பலமுறை கேட்டுக் கொள்வேன்.

என்னை இத்தனை காலம் உறுத்தி கொண்டிருந்த இந்த விசயம் இன்று நட்பாஸின் கட்டுரையை படித்தபோதுதான் மனம் நிம்மதி அடைந்தது. நட்பாஸூக்கு மீண்டும் நன்றி.

சனி, 12 பிப்ரவரி, 2011

பயணம் திரைப்பட விமரிசனம் - 1

பயணம் – 1
மீண்டும் பிரகாஷ்ராஜ், ராதா மோகன் இணைந்து தந்திருக்கும் குடும்பத்தினருடன் உட்கார்ந்து பார்க்கும் வகையில் பயணித்திருக்கும் படம்.
விமான கடத்தல், தீவிரவாதியை விடுவிக்க பேரம், பாகிஸ்தான், அப்பாவி முஸ்லீம்களைக் கூட தீவிரவாத கண்ணோட்டத்துடன் பார்க்க வைக்கும் ஜிகாத் என்கிற பெயரில் பாகிஸ்தானிலிருந்து மூளைச் சலவை செய்து நாட்டில் ஊடுருவும் சில தீவிரவாதிகளைப் பற்றிச் சொல்லும் படம்.

Stock home syndrome, hertz , இதுவ்ரை நடந்த விமான கடத்தல்களைப் பற்றி விவரஙகளை நண்பர் திரு.சரவண மூர்த்தியிடம் கேட்டிருக்கிறேன். அடுத்த பதிவில் விவரமாக வெளியிடுகிறேன்.

கணவனிடம் சில வருடங்கள் சண்டை போட்டு சலித்து தனியாக பிரயாணிக்கும் பெண், அருகில் கல்யாணம் ஆன புதிதில் மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு, நீண்ட காலமாக வறட்டு ஜம்பமாக மன்னிப்பு கேட்காமல் இருந்து பிறகு மன்னிப்பு கேட்கும் கணவன், பாகிஸ்தானிலிருந்து வந்து குழந்தையின் ஆபரஷேனை சென்னையில் முடித்து விட்டு பாகிஸ்தான் திரும்பும் பெற்றோர், சிகரெட் பிடிக்கும் நவீன காலத்து பெண், ஸ்டெதொஸ்கோப் கழுத்திலேயே தொங்கவிட்டு அலையாத டாக்டர். கார்ல்மார்க்ஸையும் காந்தியையும் படித்தவர், குரானையும் பைபிளையும் ஒன்றாக கருதும் பாதிரியார், மத்திய அமைச்சர் என்று அலட்டி கொள்ளாதவர், ஜோசியத்தை பிழைப்பாக கொண்டவர், சினிமாவில் ஹீரோத்தனத்தை காட்டி, நிஜத்தில் சாதாரணமானவராய் இருந்து தூங்கி வழிந்து, இறுதியில் பொங்கி எழும் சினிமா ஹீரோ, அவருடைய ரசிகனாய் இருந்து ஹீரோவின் நிஜ முகம் தெரிந்து ஹீரோவே மறந்து போன அவருடைய பஞ்ச் டயலாக்குகளை நினைவுபடுத்தும் ரசிகர் என ஒவ்வொருவரிடம் ஒரு கதையை வைத்துக் கொண்டு அவர்களுடைய கனவுகள் போல் மேலே பறக்கும் விமானம்.

ஐஏ எஸ் அதிகாரியின் கோபம், பயணிகளின் பயம், மீடியாக்களின் ஆர்வம் என அனைவரது உணர்ச்சிகளையும் படம் பிடிக்கும் ரெட் காமிரா.

தீவிரவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற/ எதிர்க்க திராணியற்று குழம்பி தவிக்கும் இந்திய அரசியல்வாதிகளின் பிடியில் செயலற்று நிற்கும் போலிஸ் துறை அதிகாரிகளைப் பற்றிச் சொல்லும் படம்.

ஹீரோவாக நாகார்ஜூனா தமிழ் கதா நாயகர்கள் போல் எந்த பஞ்ச் டயலாக் பேசாத ஹீரோவாக, தன்னுடைய பங்கு வரும்வரை காத்திருந்து செய்ய வேண்டிய வேலையை மட்டும் கச்சிதமாக முடிக்கும் ஒரு அதிகாரியாக, இப்படிபட்ட ஹீரோக்கள் தமிழ் சினிமாவிற்கு புதுசு.

பாடல்கள் தேவையில்லை என்பதை உணர்ந்து பட தலைப்பு போடும்போது மட்டும் தலைப்பை ஒட்டிய ஒரு பாடல்.

ரெட் காமிரா இறுதி காட்சி வரை தென்றல். இறுதி பத்து நிமிடங்களில் புயல் வேகம்.

படத்தின் வேகத்தை குறைக்காத திகட்டாத காமெடி காட்சிகள். ஒவ்வொரு ஷாட்டிலும் சாட்டையடி தரும் மனிரத்ன ஸ்டைலில் வசனங்கள்.
அனாவசியமாக ஒரு வசனம் கூட இல்லை. இறுதியில் குழந்தையிடம் தீவிரவாதி பரிசு பற்றி பேசும் ஒரு வசனம் உட்பட.

காஷ்மீர் காட்சிகளில் மட்டும் தென்படும் தமிழ் சப்டைடில்கள் மற்ற இடங்களில் ஒவ்வொருவருடைய பதவிகளைக் குறிக்கும்போது ஆங்கிலத்தில் மட்டுமே காட்டப்படுவது ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு சிரமமாயிருக்கும்.

விமானம் ஒரு இடத்தில் நான்கைந்து நாட்களுக்கு மேல் நிறுத்தப்படுகிறது. மும்பை நிகழ்ச்சி போல் மீடியாக்களில் நல்ல தீனியாக காண்பிக்கப் படுகிறது. டி ஆர் பி ரேட்டிங்கிற்காகவும் மக்களிடம் உண்மையைச் சொல்கிறோம் என்கிற போர்வையில் பத்திரிக்கை சுதந்திரம் பேசும் மீடியாக்களுக்கு சாட்டையடி.



பஞ்ச் டையலாக் மட்டுமே பேசிக் கொண்டு சினிமாவில் தீவிரவாதிகளை துரத்திக் கொண்டேயிருக்கும் சினிமா ஹீரோக்களுக்கு சாட்டையடி. இறுதியில் சினிமா ஹீரோ பொங்கி எழுவது இயல்பாக காட்டப்படுவது அழகு.


பாஸ்கர் மட்டும் ஒவ்வொரு முறையும் தீவிரவாதிகளிடம் ஒரு சின்ன வேண்டுகோள் விடுக்கிறார். நாமும் ஒரு சின்ன வேண்டுகோள் வைக்கிறோம். தரமான படம் தருவதற்காக மெனக்கெடும் நீங்கள் மொழி, அபியும் நானும் படங்களைப் போல் சற்று அழுத்த்மான கதைக் களத்தை அடுத்த முறை எடுங்கள்.
பயணம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.
ஒரு தடவை படித்த நடுத்தர வர்க்கத்தினர் குடும்பத்தோடு பார்த்து விட்டு வரலாம்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி ஆண்டுவிழா

முதல்வர் வாசித்த ஆண்டறிக்கை.

வாழ்க்கை பயணத்திலே
வழியை சிந்திக்கும் தருணத்திலே
வந்த வழி எது
செல்லும் வழி எது
தீர்மானிப்பது யாரு?
நம்மை அன்றி வேறு யாரு?
முடிவு எடுத்துக் கூறு.

ஏழு வருடங்கள் கழிந்து விட்டன. எட்டாம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் எட்டாம் ஆண்டுவிழாவிற்காக அனைவரும் இங்கே கூடியிருக்கிறோம்.

இத்தருணத்தில் 2010 – 2011 ஆண்டறிக்கையை வாசிப்பதில் பெருமையடைகின்றேன்.

ஆய கலைகள் அனைத்தும் வாசி
மாய வித்தைகள் செய்ய யோசி
சரளமாக ஆங்கிலத்தில் பேசி
வரலாம் பெரிய மனிதனாக என் ஆசி
ஆங்கிலம் பொருள் ஈட்ட தேவை
பழக்கப்படுத்து பேசுவதற்கு நாவை
மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கு பயிற்சியளிக்க பெங்களூருவிலிருந்து ஐ.எல்.எம் என்கிற பயிற்சி நிறுவனத்தினர் மூன்று மாதங்கள் சிறப்பு பயிற்சி அளித்தனர். இதற்காக செலவுத் தொகையான ஒரு இலட்சத்தை நிர்வாகம் ஒரு இலட்சத்தை செலவு செய்தது. இதே பயிற்சி அளித்த மற்ற பள்ளிகளைப் போல் மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. மூன்று மாதப் பயிற்சியின் பலனாக நம் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் மனோதைரியம் ஏற்பட்டுள்ளது.

படிக்க படிக்க வளருவது அறிவுக் கண் பார்வை. படிக்க தேவை நல்ல கண் பார்வை அதுவே கற்பதற்கு முக்கிய தேவை என்பதால் லோட்டஸ் ஐ பவுண்டேஷன் நம் மாணவர்களுக்காகப் பள்ளி வளாகத்தில் கண் சிகிச்சை முகாம் நடத்தியது.

ஆசிரியர் பணி அறப்பணி என்றார் அறிஞர் அண்ணா. கற்க கற்க ஊறும் அறிவுக் கேணி என்பதை உணர்ந்த அறிவுப் பசி போக்கும் ஆசிரியரின் திறன் மேம்படுதல் மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என்பதால் எஜூ லேர்ன் நம் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் க்ளாஸ் பயிற்சி அளித்தது. இப்பயிற்சியின் மூலம் வரும் ஆண்டு முதல் நம் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கணினி மூலம் கல்வி கற்பிப்பர்.
கண்ணோடு காண்பதெல்லாம் உண்மையில்லை. அறிவினைப் பயன்படுத்தி அறிவுக் கண்ணோடு காண வேண்டும் என்பதனை உணர்த்த நம் பள்ளி மாணவர்களுக்காக ஒரு மாஜிக் ஷோ பள்ளி வளாகத்திலேயே நடத்தப் பட்டது.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். யோகாசன பயிற்சி மாணவர்களுக்கு இன்றியமையாத ஒன்று. நம் பள்ளி மாணவர்களுக்கு கோவை மாவட்டத்திலேயே யோகாசன பயிற்சி சிறப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுவது நம் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே.

திருப்பூரில் மாநில அளவில் நடைபெற்ற யோகாசன போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் நம் பள்ளி மாணவர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு பல பிரிவுகளில் வென்று சாதனை படைத்தனர்.
எம்.சத்யாவும் வி.சியாம்குமாரும் பி. நவீன்குமாரும் முதலிடம் பெற்றனர்.
ஈ.பிரீதி, எம். நிதீஷ், ரோஷினி ராஜ் இரண்டாம் இடத்தை பெற்றனர்.
ஏ.டி.கிருத்திகா, ஏ.டி. நிகிலா, கே. நந்தகுமார் மூன்றாம் இடத்தை பெற்றனர்.

கோவையில் சுப்பையா மீனாட்சி பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பல மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதலாம் வகுப்பு படிக்கும் யெஷ்வந்தும் ஏழாம் வகுப்பு படிக்கும் எம்.சத்யா நான்காம் இடத்தை பிடித்தனர்.

நம் பள்ளி மாணவர்களில் யோகாசனப் பயிற்சியில் முதலாவதாக விளங்குவது ஐந்தாம் வகுப்பு மாணவன் வி.ஷியாம் குமார். ஷியாம் குமாரின் சாதனைகளை முழுவதும் சொல்ல நேரமின்மை காரணமாக சிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.
விஷ்ணு வித்யாலயாவில் நடந்த யோகாசன போட்டியில் பங்கேற்று சாம்பியன் கோப்பையை வென்ற சியாம்குமாருக்கு யோக நட்சத்திர விருது அளிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற தேசிய அளவில் இந்தியாவிலிருக்கும் அனைத்து மாநிலங்களிலிருந்து பெருவாரியாக போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நம் சியாம்குமார் பொதுப் பிரிவில் முதலிடம் பெற்றான். கையால் தாங்கும் போட்டியிலும் முதலிடம் வென்றான். முன்னோக்கிய போட்டியில் இரண்டாம் இடத்தையும் பின்னோக்கிய போட்டியில் மூன்றாம் இடத்தையும் திருப்புதலில் மூன்றாம் இடத்தையும் பெற்றதால் நடைபெற்ற அனைத்துப் பிரிவு போட்டிகளிலும் பரிசு வென்றதன் மூலம் சாம்பியன்களின் சாம்பியன் என்கிற தகுதி பட்டம் கிடைத்தது.
வராஹி மிஸ்டிக் யோகா மையம் நடத்திய போட்டிகளில் முதலிடத்தை வென்றான். திருப்பூரில் நடைபெற்ற தமிழக மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட சியாம்குமாருக்கு இந்த சின்னஞ்சிறிய வயதில் ஒரு அரிய வாய்ப்பு கிட்டியது.

வாழ்க்கையில் ஒரு முறையேனும் வெளி நாட்டிற்கு சென்று பார்த்துவர நம்மில் பலரும் ஆசைப்படுவது உண்டு. வெனிஸ் நகர அழகில் மயங்கிய ஒரு அறிஞர் மனிதன் ஒரு தடவையாவது இறப்பதற்கு முன்னர் வெனிஸ் நகருக்குச் சென்று காண வேண்டும் என்பார். அக்கரைச் சீமை அழகில் மனம் ஆட கனவு காண்பார் பலர். அத்தகைய அயல் நாட்டிற்கு இந்தியா சார்பாக போட்டிகளில் கலந்து கொள்வது நம் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒன்று.

அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல் மலேசியாவில் நடைபெற்ற யோகா போட்டிகளில் உலக அளவில் பல நாடுகளிலிருந்து கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பாக நம் பள்ளி மாணவன் சியாம்குமார் பங்கேற்க தேர்ந்தெடுக்கப் பட்டான்.
ஆர்டிஸ்டிக் ஜோடி யோகா போட்டியிலும், யோகா ஒலிம்பிக் போட்டியிலும் ஆக இரண்டு போட்டிகளில் உலக அளவில் முதலிடம் பெற்று இரண்டு தங்கம் பெற்றான். கோப்பையும் வென்று சாம்பியன் பட்டம் பெற்று தாய் நாட்டிற்கு திரும்பிய போது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வரவேற்று பாராட்டினார். கோவைக்கு வந்ததும் S P kannan சியாம்குமாரை பாராட்டினார்.
மலேசியா சென்று போட்டிகளில் கலந்து திரும்புவதற்கான செலவுத் தொகை எழுபத்தைந்தாயிரத்தில் ஐம்பதாயிரம் பள்ளி நிர்வாகம் தந்தது. திரு.சி.கிருஷ்ண குமார் அவர்கள் மனமுவந்து நேரில் வந்து பொருளுதவி கொடுத்து உதவினார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மீதத் தொகையை நம் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மனமுவந்து அளித்தனர். பொருளுதவியும் ஊக்கமும் கொடுத்து ஆதரித்த நல்ல உள்ளங்களுக்கு எங்கள் இதயப் பூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நம் பள்ளி மாணவன் சியாம்குமாரைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட தினத் தந்தி, மாலை மலர் பத்திரிக்கைகளுக்கு எங்களது நன்றி. இச்செய்தியை ஒலிபரப்பிய டி டிவி தொலைகாட்சி சானலுக்கும் காப்டன் டிவி தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

யோகாசனம் மட்டுமல்ல. அனைத்து துறைகளிலும் நம் பள்ளி மாணவர்கள் முத்திரை பதித்துள்ளனர்.

சர்%ப் சோப்பு நிறுவனம் விஜய் டிவியுடன் இணைந்து நடத்திய கறை நல்லது என்கிற கதை சொல்லும் போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அசத்தினர்.

நம் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் சரவணன் இளம் அறிவியல் விஞ்ஞானியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசு ரூபாய் ஐந்தாயிரம் அளித்தது. கோவையில் சி.எஸ்.ஐ பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நம் மாணவன் சரவணன் செய்த அறிவியல் சார்ந்து அமைக்கப்பட்ட இரயில் விபத்துகளைத் தடுக்கும் எளிய அமைப்பு அனைவரையும் கவர்ந்தது.

ஆகஸ்டு மாதத்தில் ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மற்றும் சரணாலயத்திற்கு நம் பள்ளி மாணவர்கள் சென்று பறவைகளைக் கண்டு பல அறிவியல் உண்மைகளை அறிந்தனர். இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து நம் கோவையில் உள்ள பறவைகள் பற்றி பல செய்திகளை கற்றுக் கொண்டனர்.

அதேபோல இம்மாதம் நேரு ஏரோநாடிகல் பொறியியற் கல்லூரியில் நடைபெற்ற விமானக் கண்காட்சிக்கும் நேரில் சென்று விமானங்கள் இயங்கும் விதம், பறக்கும் முறை, விமானத்தில் உள்ள பாகங்கள் அவற்றின் செயல்பாடுகள் போன்றவற்றை கற்று பயனடைந்தனர்.

ஒவ்வொரு மாணவனிடமும் ஏதாவது ஒரு திறமை உண்டு என்பதை உணர்ந்து நெஸ்லே நிறுவனம் திறனறி தேர்வு நம் பள்ளி வளாகத்தில் நடத்தி மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்தது.
இறுதியாக சில வார்த்தைகளைச் சொல்லி ஆண்டறிக்கையை நிறைவு செய்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும்
கடந்து செல்லும் காற்றைப் போல.
தென்றலாய் வீசினாலும்
புயலாய் அடித்தாலும்
குளிராய் போர்த்தினாலும்
தீயாய் தகித்தாலும்
காற்றே உன்னை சுவாசிக்கிறேன்.
எனவேதான் வாழ்கிறேன்
என்றான் ஒரு கவிஞன்.
எனவே ஒவ்வொரு ஆண்டும் எங்களால் சிறப்பாக செயல்படுவது
உங்களால் மட்டுமே. உங்கள் ஆதரவால் மட்டுமே
என்று கூறி அமைகின்றேன்.
நன்றி.

வாழ்த்துவோம்


கோவை டி.வி.எஸ் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் எட்டாவது ஆண்டு விழா 30-01-2010 ஞாயிற்றுக் கிழமை அன்று பள்ளி வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது. சிறப்பம்சமாக பள்ளிக் குழந்தைகளின்  நான்கு பெற்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்களாக முதல்வரும் தாளாளருமான திருமதி.பானுமதி வீரராகவன் அவர்களால் கவுரவிக்கப்பட்டனர். ஆண்டு விழா முழுவதையும் குழந்தைகளே தொகுத்து வழங்கியதும், முதலாம் வகுப்பில் படிக்கும் திரிசுலா, பி.ஹரிணி வரவேற்புரை வழங்கியது அனைவரையும் கவர்ந்தது.
      சிறந்த பெற்றோர்களான எல்.கே.ஜி வகுப்பில் படிக்கும் மா.மெர்ஸியின் பெற்றோர் திரு.மானுவல் ராஜா, திருமதி ஹேமா மானுவல் ராஜா அவர்கள், மூன்றாம் வகுப்பில் படிக்கும் ப.லட்சுமியின் பெற்றோர் திரு. பரதராஜன், திருமதி கீதா. அவர்கள், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ஹ. நிவேதாவின் பெற்றோர் திரு.ஹரிஹரன், திருமதி தனலட்சுமி. அவர்கள் ஆறாம் வகுப்பில் படிக்கும் சல்மாசுல்தானாவின் பெற்றோர் திரு.ரஃபி, திருமதி.சமிதா அவர்கள்  படிப்பிலும், விளையாட்டிலும் மற்றும் பல்வேறுத் துறைகளில் சாதித்த பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர்.

2011 ஜனவரி 15ல் மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய யோகா போட்டிகளில் கோவையிலுள்ள ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வி.ஷியாம்குமார் இந்திய அணி சார்பாக பங்கேற்று இரண்டு போட்டிகளில் முதலாவதாக வென்று இரண்டு தங்க பதக்கங்களைப் பெற்றுள்ளான்.  யோகா ஆசிரியர் திரு. பழனிச்சாமி அவர்களும் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய யோகா போட்டிகளில் யோக கலைமாமணி விருதையும் யோக கலாநிதி விருதும் கோப்பையும் பெற்றார். இருவரையும் பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோர்களும், குழந்தைகளும் பாராட்டினர். ஆண்டறிக்கையை முதல்வர் வாசித்தார்.

பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக யோகாசனங்களான வீராசனம், சக்கராசனம், பத்ம மயூராசனம், ஏகபாக சிரசாசனம், பத்ம சிரசாசனம், இராஜ கபோட்டாசனம், உஷட்ராசனம், விருஷ்சாசனம், சர்வாங்காசனம் ஆகியவற்றை தொகுத்து அமைக்கப்பட்ட அபூர்வமான நடன நிகழ்ச்சி பார்வையாளர் அனைவரையும் கவர்ந்தது. இறுதியில் முதல்வர் பானுமதி வீரராகவன் நன்றியுரை வாசிக்க விழா இனிதே முடிந்தது.

ஆண்டறிக்கை தமிழில் அடுத்த இடுகையில்.