செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதிலே....

நட்பாஸின் கட்டுரை தக்க சமயத்தில் வந்திருக்கிறது. முதலில் அதற்கு ஒரு பின்னூட்டம் போடலாம் என்றுதான் நினைத்தேன். அது நீண்டுவிடும் எனத் தோன்றியதால் இந்த பதிவு.
முதலில் இரு விஷயங்கள்.
ஒன்று அந்தப் பதிவை பாராட்டுவதற்காக இதை எழுதவில்லை. அதிலுள்ள சில கருத்துக்கள் எனது மனதில் வெகு காலம் இருந்து வந்து நட்பாஸ் எழுத்து வடிவம் கொடுப்பதற்காக காத்திருந்ததோ எனத் தோன்றுகிறது.
இரண்டு எனது பலவீனங்களை வெளிபடுத்தியோ யாரையும் புண்படுத்தும் நோக்கிலோ இந்த பதிவு எழுதவில்லை.
எதற்காக இந்த பீடிகை என்பது முழுவதும் படித்தால் விளங்கும்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி.
திருப்பூரில் பாரதியாரின் நினைவு நாளையொட்டி ரோடரி சங்கத்தினர் பள்ளிகளுக்கிடையேயான கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகளை நடத்தினர். இதில் நடுவர்களில் ஒருவராக இருக்க எனக்கு அழைப்பு வந்தது. தமிழில் எனக்கு இருந்த ஆர்வத்தினால் உடனே ஒப்புக் கொண்டேன். பிறகுதான் தெரிந்தது. என்னை பேச்சு போட்டியிலும் இசை போட்டியிலும் நடுவராக போட்டிருந்தார்கள்.

இசை போட்டியில் என்னுடன் அமர்ந்த மற்ற இருவரும் முறையாக சங்கீதம் கற்றவர்கள். வித்வான் பெண்மணிகள். பங்கேற்ற திருப்பூர் மாணவ மாணவியர் அனைவருமே நன்றாக பாடினர். முதல் இடத்திற்கும் மூன்றாம் இடத்திற்கும் இரண்டு இரண்டு பேர்களைத் தேர்வு செய்தேன். எனவே பிறகு மற்ற நடுவர்களோடு கலந்து ஆலோசித்து ஒவ்வொரு இடத்திற்கும் ஒருவ்ரை மட்டும் தேர்ந்து எடுத்து மற்றவ்ரை பட்டியலிலிருந்து நீக்கினோம். இவ்வாறு நீக்கப்பட்டவர்கள் சரியாக பாடவில்லை என்று பொருள் இல்லை. தேர்ந்து எடுக்கப்பட்டவர்களை விட அதிகமாக தவறு செய்தனர் என்பதுதான் காரணம்.

அது மட்டுமல்ல மற்றவர்களுக்கு நான் போட்டிருந்த மதிப்பெண்களுக்கும் மற்ற இரு நடுவர்களின் மதிப்பெண்களுடன் அப்படியே ஒத்து போயிற்று. முக்கியமான விசயம் என்னவென்றால் முதல் இடத்திற்கும், மூன்றாம் இடத்திற்கும் நான் தேர்வு செய்தவர்கள் எந்த எந்த இடங்களில் பாடுவதில் தவறு செய்தார்கள் என்பதை மிகவும் சரியாக என்னால் குறிப்பிட முடிந்தது. அது என்ன வகையான தவறு என்பதை சங்கீத அறிவு உடைய அந்த இரு நடுவர்களும் விளக்கினார்கள்.

என் மனைவியும் என் மகனும் இன்று வ்ரை என்னை கிண்டல் செய்து வியந்த விசயம் என்னவென்றால் என்னை எப்படி நடுவராக போட்டார்கள் என்றுதான்.
காரணம் என்னால் சுமாராக கூட பாட வராது என்பதுதான். என் மனைவியும் மகனும் அருமையாக பாடக் கூடியவர்கள்.
ஆனால் அவர்களுக்கு ராகங்களின் பெயர்கள், சரளி வரிசை, தாள வகைகள் தெரியாது. நானோ ராகங்களின் பெயர்கள், தாள வகைகள் பற்றி படித்திருக்கிறேன்.

இன்றுவரை ஏன் ஒரு முறை நான் பணியாற்றிய கல்லூரியில் ஒன்றில் கூட மீண்டும் இத்தகைய வாய்ப்பு வந்து நடுவராக நான் பணியாற்றியது சரியா என்று எனக்கே நான் கேட்டுக் கொள்வேன். என்னால் தம் கட்டி ராகத்துடன், தாள சுதியோடு பாட முடியாத போது நடுவராக எனக்கு என்ன தகுதி, முறையா? என்று என்னை நானே பலமுறை கேட்டுக் கொள்வேன்.

என்னை இத்தனை காலம் உறுத்தி கொண்டிருந்த இந்த விசயம் இன்று நட்பாஸின் கட்டுரையை படித்தபோதுதான் மனம் நிம்மதி அடைந்தது. நட்பாஸூக்கு மீண்டும் நன்றி.

1 கருத்து:

  1. வீரா, நீங்கள் கண்ணைக் கட்டிக் கொண்டு ஓவியப் போட்டியில் தீர்பளித்தால்கூட அது சரியானதாகவே இருக்கும்.

    உங்கள் திறமைகள் எனக்கு என் சிறு வயதில் பிரமிப்பளித்தன- இன்னும் அந்த பிரமிப்பில்தான் இருக்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு