செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி ஆண்டுவிழா

முதல்வர் வாசித்த ஆண்டறிக்கை.

வாழ்க்கை பயணத்திலே
வழியை சிந்திக்கும் தருணத்திலே
வந்த வழி எது
செல்லும் வழி எது
தீர்மானிப்பது யாரு?
நம்மை அன்றி வேறு யாரு?
முடிவு எடுத்துக் கூறு.

ஏழு வருடங்கள் கழிந்து விட்டன. எட்டாம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் எட்டாம் ஆண்டுவிழாவிற்காக அனைவரும் இங்கே கூடியிருக்கிறோம்.

இத்தருணத்தில் 2010 – 2011 ஆண்டறிக்கையை வாசிப்பதில் பெருமையடைகின்றேன்.

ஆய கலைகள் அனைத்தும் வாசி
மாய வித்தைகள் செய்ய யோசி
சரளமாக ஆங்கிலத்தில் பேசி
வரலாம் பெரிய மனிதனாக என் ஆசி
ஆங்கிலம் பொருள் ஈட்ட தேவை
பழக்கப்படுத்து பேசுவதற்கு நாவை
மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கு பயிற்சியளிக்க பெங்களூருவிலிருந்து ஐ.எல்.எம் என்கிற பயிற்சி நிறுவனத்தினர் மூன்று மாதங்கள் சிறப்பு பயிற்சி அளித்தனர். இதற்காக செலவுத் தொகையான ஒரு இலட்சத்தை நிர்வாகம் ஒரு இலட்சத்தை செலவு செய்தது. இதே பயிற்சி அளித்த மற்ற பள்ளிகளைப் போல் மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. மூன்று மாதப் பயிற்சியின் பலனாக நம் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் மனோதைரியம் ஏற்பட்டுள்ளது.

படிக்க படிக்க வளருவது அறிவுக் கண் பார்வை. படிக்க தேவை நல்ல கண் பார்வை அதுவே கற்பதற்கு முக்கிய தேவை என்பதால் லோட்டஸ் ஐ பவுண்டேஷன் நம் மாணவர்களுக்காகப் பள்ளி வளாகத்தில் கண் சிகிச்சை முகாம் நடத்தியது.

ஆசிரியர் பணி அறப்பணி என்றார் அறிஞர் அண்ணா. கற்க கற்க ஊறும் அறிவுக் கேணி என்பதை உணர்ந்த அறிவுப் பசி போக்கும் ஆசிரியரின் திறன் மேம்படுதல் மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என்பதால் எஜூ லேர்ன் நம் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் க்ளாஸ் பயிற்சி அளித்தது. இப்பயிற்சியின் மூலம் வரும் ஆண்டு முதல் நம் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கணினி மூலம் கல்வி கற்பிப்பர்.
கண்ணோடு காண்பதெல்லாம் உண்மையில்லை. அறிவினைப் பயன்படுத்தி அறிவுக் கண்ணோடு காண வேண்டும் என்பதனை உணர்த்த நம் பள்ளி மாணவர்களுக்காக ஒரு மாஜிக் ஷோ பள்ளி வளாகத்திலேயே நடத்தப் பட்டது.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். யோகாசன பயிற்சி மாணவர்களுக்கு இன்றியமையாத ஒன்று. நம் பள்ளி மாணவர்களுக்கு கோவை மாவட்டத்திலேயே யோகாசன பயிற்சி சிறப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுவது நம் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே.

திருப்பூரில் மாநில அளவில் நடைபெற்ற யோகாசன போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் நம் பள்ளி மாணவர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு பல பிரிவுகளில் வென்று சாதனை படைத்தனர்.
எம்.சத்யாவும் வி.சியாம்குமாரும் பி. நவீன்குமாரும் முதலிடம் பெற்றனர்.
ஈ.பிரீதி, எம். நிதீஷ், ரோஷினி ராஜ் இரண்டாம் இடத்தை பெற்றனர்.
ஏ.டி.கிருத்திகா, ஏ.டி. நிகிலா, கே. நந்தகுமார் மூன்றாம் இடத்தை பெற்றனர்.

கோவையில் சுப்பையா மீனாட்சி பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பல மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதலாம் வகுப்பு படிக்கும் யெஷ்வந்தும் ஏழாம் வகுப்பு படிக்கும் எம்.சத்யா நான்காம் இடத்தை பிடித்தனர்.

நம் பள்ளி மாணவர்களில் யோகாசனப் பயிற்சியில் முதலாவதாக விளங்குவது ஐந்தாம் வகுப்பு மாணவன் வி.ஷியாம் குமார். ஷியாம் குமாரின் சாதனைகளை முழுவதும் சொல்ல நேரமின்மை காரணமாக சிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.
விஷ்ணு வித்யாலயாவில் நடந்த யோகாசன போட்டியில் பங்கேற்று சாம்பியன் கோப்பையை வென்ற சியாம்குமாருக்கு யோக நட்சத்திர விருது அளிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற தேசிய அளவில் இந்தியாவிலிருக்கும் அனைத்து மாநிலங்களிலிருந்து பெருவாரியாக போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நம் சியாம்குமார் பொதுப் பிரிவில் முதலிடம் பெற்றான். கையால் தாங்கும் போட்டியிலும் முதலிடம் வென்றான். முன்னோக்கிய போட்டியில் இரண்டாம் இடத்தையும் பின்னோக்கிய போட்டியில் மூன்றாம் இடத்தையும் திருப்புதலில் மூன்றாம் இடத்தையும் பெற்றதால் நடைபெற்ற அனைத்துப் பிரிவு போட்டிகளிலும் பரிசு வென்றதன் மூலம் சாம்பியன்களின் சாம்பியன் என்கிற தகுதி பட்டம் கிடைத்தது.
வராஹி மிஸ்டிக் யோகா மையம் நடத்திய போட்டிகளில் முதலிடத்தை வென்றான். திருப்பூரில் நடைபெற்ற தமிழக மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட சியாம்குமாருக்கு இந்த சின்னஞ்சிறிய வயதில் ஒரு அரிய வாய்ப்பு கிட்டியது.

வாழ்க்கையில் ஒரு முறையேனும் வெளி நாட்டிற்கு சென்று பார்த்துவர நம்மில் பலரும் ஆசைப்படுவது உண்டு. வெனிஸ் நகர அழகில் மயங்கிய ஒரு அறிஞர் மனிதன் ஒரு தடவையாவது இறப்பதற்கு முன்னர் வெனிஸ் நகருக்குச் சென்று காண வேண்டும் என்பார். அக்கரைச் சீமை அழகில் மனம் ஆட கனவு காண்பார் பலர். அத்தகைய அயல் நாட்டிற்கு இந்தியா சார்பாக போட்டிகளில் கலந்து கொள்வது நம் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒன்று.

அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல் மலேசியாவில் நடைபெற்ற யோகா போட்டிகளில் உலக அளவில் பல நாடுகளிலிருந்து கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பாக நம் பள்ளி மாணவன் சியாம்குமார் பங்கேற்க தேர்ந்தெடுக்கப் பட்டான்.
ஆர்டிஸ்டிக் ஜோடி யோகா போட்டியிலும், யோகா ஒலிம்பிக் போட்டியிலும் ஆக இரண்டு போட்டிகளில் உலக அளவில் முதலிடம் பெற்று இரண்டு தங்கம் பெற்றான். கோப்பையும் வென்று சாம்பியன் பட்டம் பெற்று தாய் நாட்டிற்கு திரும்பிய போது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வரவேற்று பாராட்டினார். கோவைக்கு வந்ததும் S P kannan சியாம்குமாரை பாராட்டினார்.
மலேசியா சென்று போட்டிகளில் கலந்து திரும்புவதற்கான செலவுத் தொகை எழுபத்தைந்தாயிரத்தில் ஐம்பதாயிரம் பள்ளி நிர்வாகம் தந்தது. திரு.சி.கிருஷ்ண குமார் அவர்கள் மனமுவந்து நேரில் வந்து பொருளுதவி கொடுத்து உதவினார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மீதத் தொகையை நம் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மனமுவந்து அளித்தனர். பொருளுதவியும் ஊக்கமும் கொடுத்து ஆதரித்த நல்ல உள்ளங்களுக்கு எங்கள் இதயப் பூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நம் பள்ளி மாணவன் சியாம்குமாரைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட தினத் தந்தி, மாலை மலர் பத்திரிக்கைகளுக்கு எங்களது நன்றி. இச்செய்தியை ஒலிபரப்பிய டி டிவி தொலைகாட்சி சானலுக்கும் காப்டன் டிவி தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

யோகாசனம் மட்டுமல்ல. அனைத்து துறைகளிலும் நம் பள்ளி மாணவர்கள் முத்திரை பதித்துள்ளனர்.

சர்%ப் சோப்பு நிறுவனம் விஜய் டிவியுடன் இணைந்து நடத்திய கறை நல்லது என்கிற கதை சொல்லும் போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அசத்தினர்.

நம் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் சரவணன் இளம் அறிவியல் விஞ்ஞானியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசு ரூபாய் ஐந்தாயிரம் அளித்தது. கோவையில் சி.எஸ்.ஐ பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நம் மாணவன் சரவணன் செய்த அறிவியல் சார்ந்து அமைக்கப்பட்ட இரயில் விபத்துகளைத் தடுக்கும் எளிய அமைப்பு அனைவரையும் கவர்ந்தது.

ஆகஸ்டு மாதத்தில் ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மற்றும் சரணாலயத்திற்கு நம் பள்ளி மாணவர்கள் சென்று பறவைகளைக் கண்டு பல அறிவியல் உண்மைகளை அறிந்தனர். இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து நம் கோவையில் உள்ள பறவைகள் பற்றி பல செய்திகளை கற்றுக் கொண்டனர்.

அதேபோல இம்மாதம் நேரு ஏரோநாடிகல் பொறியியற் கல்லூரியில் நடைபெற்ற விமானக் கண்காட்சிக்கும் நேரில் சென்று விமானங்கள் இயங்கும் விதம், பறக்கும் முறை, விமானத்தில் உள்ள பாகங்கள் அவற்றின் செயல்பாடுகள் போன்றவற்றை கற்று பயனடைந்தனர்.

ஒவ்வொரு மாணவனிடமும் ஏதாவது ஒரு திறமை உண்டு என்பதை உணர்ந்து நெஸ்லே நிறுவனம் திறனறி தேர்வு நம் பள்ளி வளாகத்தில் நடத்தி மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்தது.
இறுதியாக சில வார்த்தைகளைச் சொல்லி ஆண்டறிக்கையை நிறைவு செய்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும்
கடந்து செல்லும் காற்றைப் போல.
தென்றலாய் வீசினாலும்
புயலாய் அடித்தாலும்
குளிராய் போர்த்தினாலும்
தீயாய் தகித்தாலும்
காற்றே உன்னை சுவாசிக்கிறேன்.
எனவேதான் வாழ்கிறேன்
என்றான் ஒரு கவிஞன்.
எனவே ஒவ்வொரு ஆண்டும் எங்களால் சிறப்பாக செயல்படுவது
உங்களால் மட்டுமே. உங்கள் ஆதரவால் மட்டுமே
என்று கூறி அமைகின்றேன்.
நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக