இந்த வலைப்பூ தொடங்கியதன் நோக்கமே எளிய தமிழில் இலக்கியங்களை சாதாரண வாசகருக்கு அறிமுகப் படுத்துவதுதான்.
இதன் தொடர்ச்சியாகவே, திருக்குறளைப் பற்றி, கீதை, கவிதை, கட்டுரை என எழுதத் துவங்கினேன்.
இதன் அடுத்த கட்டமாக சிவஞான முனிவர் இயற்றிய சிவஞான மாபாடியத்தை படித்துக் கொண்டிருந்த போது சில கருத்துகளில் பாட பேதங்கள் இருப்பதாக அடியேன் அறிவுக்கு புலப்பட்டது.
அதைப் பற்றி எழுதுவதன் மூலம் ஆன்ற அறிவுடைய சான்றோர் படித்து மேலும் விளக்கம் தருவர் என நினைக்கின்றேன். இதை அதிக பிரசங்கித்தனம் (தக்க தமிழ் சொல் நினைவுக்கு வரவில்லை) என்று எண்ண வேண்டாம். விளக்கம் தருவோர் இதனைக் கருத்தில் கொண்டு என்னை பொறுத்தருள்க.
அதில்,
“இவ்வத்துவிதம், ஏனையோர் கூறும் அத்துவிதம் போலக் கேவலம் என்றாதல், விசிட்டம் என்றாதல், மறுதலை என்றாதல், யாதானும் ஒன்றான் விசேடிக்கப்பட்டு நின்று பொருள் உணர்த்தாது, சுத்தமாய் நின்றே பொருள் உணர்த்துதலிற் சுத்தாத்துவிதம் என வழங்கப்படும். ஈண்டுச் சுத்தம் என்றது யாதானும் ஒன்றான் விசேடிக்கப்படாது நிற்றலை. அது “விசிட்டசத்தை”, “சுத்தசத்தை” எனத் தார்க்கிகர் கூறும் வாய்பாட்டானும் அறிக. ஏனையோர் கூறும் அத்துவிதம் கேவலம் முதலியவற்றான் விசேடிக்கப்படாத வழி அவர் கூறும் பொருள் தருதற்கு ஏலாமையின், அவையெல்லாம் சுத்தாத்துவிதம் ஆகாமையும் காண்க.” என்று விளக்குகிறார்.
குறிப்பு மேற்கண்ட பத்தி சாதாரணமான வாசகருக்கு புரிதல் கடினம். எனவே சுருக்கமாக விளக்குகிறேன்.
த்வைதம் என்கிற தத்துவம் அத்வைதம் போல, விசிட்டாத்வைதம் போல மற்றொரு தத்துவம் என்று கூறுகிறார். கேவலம், சுத்தம் என்பதன் பொருளை பின்னர் விரிவாக விளக்குகிறேன். ஏன் எனில் இங்கு சுத்தம் என்பது எதனையும் விசேடிக்கப்படாமல் நிற்றல். ஆதலால் அத்வைதம், விசிட்டாத்வைதம் முதலியவை சுத்தாத்துவம் ஆகாது என்கிறார்.
இனி கீழ்க்கண்டவாறு விளக்கம் கொள்கிறேன்.
முனிவர் கேவலமான த்வைதம் என்றும் கூறும் நெறியைக் கற்பித்த சங்கரர் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு அல்லது அதற்கு பிற்பட்ட காலத்தில் வாழ்ந்தார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மற்ற அத்வைதம் போல சுத்த த்வைதம் பெறவில்லை என்று முனிவர் கூறுதலால் சுத்தாத்வைதம் ஏனைய நெறிகளுக்கும் பிற்பட்டதாகக் கருதப்படும்.
ஆகையால் சுத்தாத்வைதம் மிக அண்மைக் காலத்தது என்று முடியும். இது உண்மையல்ல.
சுத்தாத்துவிதம் என்று சைவர்களும், விசிட்டாத்வைதம் என்று வைணவர்களும் கூறிக் கொள்கின்றனர். அது போல் கேவலாத்துவிதம் எனவோ, மறுதலை (மறுதலை என்பது இதற்கு மாறுபாடான ஒன்று எனலாம்) அத்வைதம் எனவோ மற்றவர்கள் கூறுவதில்லை. அந்தந்த தத்துவ நெறிகளைக் கூறியவர்களும் இச்சொற்களை பயன்படுத்தியிருக்க வேண்டும். இல்லையெனில் கேவலாத்துவிதம், மறுதலை அத்துவிதம் எனக்கூறுதல் படைத்து மொழிதல் என்னும் குற்றமாகும் என்பதே எனது துணிபு.
அதுமட்டுமல்ல, கேவலம் என்பதால் கூறிய முறை என வாதிடுவோர் அத்துவிதம் என்னும் சொல்லை கூறுதல் எங்ஙனம்? அது இன்மைப் பொருளைக் குறிக்கும் என்று ஏற்றுக் கொண்டாலும், ‘இரண்டும் இல்லை’ என்ற பொருளைத் தருமே அன்றி வாதிடுவோர் கூறும் அத்துணை விரித்த பொருளைத் தராது. எனவே கேவலம் என்னும் அடைமொழிக்கும் பயன் இல்லை.
அன்றியும் ‘சுத்தாத்துவிதம்’ என்பதில் இருக்கும் ‘சுத்தம்’ என்னும் சொல் தூய்மையானப் பொருள் என்கிற அடைமொழி அன்று. அவ்வாறெனில், பிரம்மம் ஒன்றே உண்மைப் பொருள் அதற்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை என்பதனால் அத்துவிதம் என்பதன் பொருளும் இதுவே ஆதல் வேண்டும் என்கிற வாத நிலைக்கே அத்தகைய கூற்று பொருள் தரும்.
அடுத்த இடுகையில் மேலும் தொடர்கிறேன்.
என்ன சொல்ல வருகிறீர்கள்? சுத்தாத்துவிதம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று சொல்கிறீர்களா?
பதிலளிநீக்குபதிவுகளைத் தொடருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களும் என்றுமே நித்தியமாய் இருப்பது. அவற்றுள் ‘பதி’ ஆகிய இறைவனே பசு, பாசங்களிலும் வியாபித்து உள்ளார். பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்தை அறியாதிருக்கின்றமையின், அந்நிலை அத்வைதம் பெத்தாத்துவிதம் ஆகும். இதனை பேதாத்துவிதம் எனவும் கூறலாம். பாசம் நீங்குமாறு பாவனை புரியும் அத்துவித உபாசனை வாயிலாக எய்தும் சுவானுபவ சம்பந்தமான அத்துவிதம் முத்தியில் நிலைக்கும். இதுவே சுத்தாத்துவிதம் ஆகும். இவ்வாறன்றி பெத்தம், முத்தி இரண்டிலும் ஒரு படித்தான அத்துவிதமே என கூறத் துணிந்தால் அது ஏகான்மவாத முடிவாகும்.
பதிலளிநீக்கு