பயணம் – 1
மீண்டும் பிரகாஷ்ராஜ், ராதா மோகன் இணைந்து தந்திருக்கும் குடும்பத்தினருடன் உட்கார்ந்து பார்க்கும் வகையில் பயணித்திருக்கும் படம்.
விமான கடத்தல், தீவிரவாதியை விடுவிக்க பேரம், பாகிஸ்தான், அப்பாவி முஸ்லீம்களைக் கூட தீவிரவாத கண்ணோட்டத்துடன் பார்க்க வைக்கும் ஜிகாத் என்கிற பெயரில் பாகிஸ்தானிலிருந்து மூளைச் சலவை செய்து நாட்டில் ஊடுருவும் சில தீவிரவாதிகளைப் பற்றிச் சொல்லும் படம்.
Stock home syndrome, hertz , இதுவ்ரை நடந்த விமான கடத்தல்களைப் பற்றி விவரஙகளை நண்பர் திரு.சரவண மூர்த்தியிடம் கேட்டிருக்கிறேன். அடுத்த பதிவில் விவரமாக வெளியிடுகிறேன்.
கணவனிடம் சில வருடங்கள் சண்டை போட்டு சலித்து தனியாக பிரயாணிக்கும் பெண், அருகில் கல்யாணம் ஆன புதிதில் மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு, நீண்ட காலமாக வறட்டு ஜம்பமாக மன்னிப்பு கேட்காமல் இருந்து பிறகு மன்னிப்பு கேட்கும் கணவன், பாகிஸ்தானிலிருந்து வந்து குழந்தையின் ஆபரஷேனை சென்னையில் முடித்து விட்டு பாகிஸ்தான் திரும்பும் பெற்றோர், சிகரெட் பிடிக்கும் நவீன காலத்து பெண், ஸ்டெதொஸ்கோப் கழுத்திலேயே தொங்கவிட்டு அலையாத டாக்டர். கார்ல்மார்க்ஸையும் காந்தியையும் படித்தவர், குரானையும் பைபிளையும் ஒன்றாக கருதும் பாதிரியார், மத்திய அமைச்சர் என்று அலட்டி கொள்ளாதவர், ஜோசியத்தை பிழைப்பாக கொண்டவர், சினிமாவில் ஹீரோத்தனத்தை காட்டி, நிஜத்தில் சாதாரணமானவராய் இருந்து தூங்கி வழிந்து, இறுதியில் பொங்கி எழும் சினிமா ஹீரோ, அவருடைய ரசிகனாய் இருந்து ஹீரோவின் நிஜ முகம் தெரிந்து ஹீரோவே மறந்து போன அவருடைய பஞ்ச் டயலாக்குகளை நினைவுபடுத்தும் ரசிகர் என ஒவ்வொருவரிடம் ஒரு கதையை வைத்துக் கொண்டு அவர்களுடைய கனவுகள் போல் மேலே பறக்கும் விமானம்.
ஐஏ எஸ் அதிகாரியின் கோபம், பயணிகளின் பயம், மீடியாக்களின் ஆர்வம் என அனைவரது உணர்ச்சிகளையும் படம் பிடிக்கும் ரெட் காமிரா.
தீவிரவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற/ எதிர்க்க திராணியற்று குழம்பி தவிக்கும் இந்திய அரசியல்வாதிகளின் பிடியில் செயலற்று நிற்கும் போலிஸ் துறை அதிகாரிகளைப் பற்றிச் சொல்லும் படம்.
ஹீரோவாக நாகார்ஜூனா தமிழ் கதா நாயகர்கள் போல் எந்த பஞ்ச் டயலாக் பேசாத ஹீரோவாக, தன்னுடைய பங்கு வரும்வரை காத்திருந்து செய்ய வேண்டிய வேலையை மட்டும் கச்சிதமாக முடிக்கும் ஒரு அதிகாரியாக, இப்படிபட்ட ஹீரோக்கள் தமிழ் சினிமாவிற்கு புதுசு.
பாடல்கள் தேவையில்லை என்பதை உணர்ந்து பட தலைப்பு போடும்போது மட்டும் தலைப்பை ஒட்டிய ஒரு பாடல்.
ரெட் காமிரா இறுதி காட்சி வரை தென்றல். இறுதி பத்து நிமிடங்களில் புயல் வேகம்.
படத்தின் வேகத்தை குறைக்காத திகட்டாத காமெடி காட்சிகள். ஒவ்வொரு ஷாட்டிலும் சாட்டையடி தரும் மனிரத்ன ஸ்டைலில் வசனங்கள்.
அனாவசியமாக ஒரு வசனம் கூட இல்லை. இறுதியில் குழந்தையிடம் தீவிரவாதி பரிசு பற்றி பேசும் ஒரு வசனம் உட்பட.
காஷ்மீர் காட்சிகளில் மட்டும் தென்படும் தமிழ் சப்டைடில்கள் மற்ற இடங்களில் ஒவ்வொருவருடைய பதவிகளைக் குறிக்கும்போது ஆங்கிலத்தில் மட்டுமே காட்டப்படுவது ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு சிரமமாயிருக்கும்.
விமானம் ஒரு இடத்தில் நான்கைந்து நாட்களுக்கு மேல் நிறுத்தப்படுகிறது. மும்பை நிகழ்ச்சி போல் மீடியாக்களில் நல்ல தீனியாக காண்பிக்கப் படுகிறது. டி ஆர் பி ரேட்டிங்கிற்காகவும் மக்களிடம் உண்மையைச் சொல்கிறோம் என்கிற போர்வையில் பத்திரிக்கை சுதந்திரம் பேசும் மீடியாக்களுக்கு சாட்டையடி.
பஞ்ச் டையலாக் மட்டுமே பேசிக் கொண்டு சினிமாவில் தீவிரவாதிகளை துரத்திக் கொண்டேயிருக்கும் சினிமா ஹீரோக்களுக்கு சாட்டையடி. இறுதியில் சினிமா ஹீரோ பொங்கி எழுவது இயல்பாக காட்டப்படுவது அழகு.
பாஸ்கர் மட்டும் ஒவ்வொரு முறையும் தீவிரவாதிகளிடம் ஒரு சின்ன வேண்டுகோள் விடுக்கிறார். நாமும் ஒரு சின்ன வேண்டுகோள் வைக்கிறோம். தரமான படம் தருவதற்காக மெனக்கெடும் நீங்கள் மொழி, அபியும் நானும் படங்களைப் போல் சற்று அழுத்த்மான கதைக் களத்தை அடுத்த முறை எடுங்கள்.
பயணம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.
ஒரு தடவை படித்த நடுத்தர வர்க்கத்தினர் குடும்பத்தோடு பார்த்து விட்டு வரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக