ஞாயிறு, 22 நவம்பர், 2009

தமிழை எழுதி பயில எளிய வழி

 நான் காந்திகிராமத்தில் சிறிது காலம் கணித விரிவுரையாளராக பணியாற்றிய போது அங்கு துணைவேந்தர் அவர்களின் சிந்தனையில் உருவான எளிய பயிற்சி மூலம் தமிழை எழுத தெரியாத மூத்தவர்களுக்கு கிராமங்களில் ஏழே நாளில் எழுதி பயில பயிற்சி கொடுக்கப்பட்டது.
அதனை சிறிது விரிவுபடுத்தினால் நம் குழந்தைகளுக்கும் அழகாக தமிழை பிழையின்றி எழுத கற்பிக்க முடியும் எனத் தோன்றியது.
எனவே நான் தற்போது நடத்தி வரும் பள்ளியில் இதனை செயலாற்ற முனைந்து வெற்றி பெற்றேன்.
மேற்படி பல்கலைக் கழகத்தின் அனுமதி பெறாமல் இதனை பலரும் அறிந்து பயன்பெற வேண்டும் என்ற பொது நல ஆர்வத்தில் சுருக்கமாக அதனை விளக்குகிறேன்.
நமது சமச்சீர் திட்டத்தில் இதனை பயன்படுத்தலாம்.
முதலாவதாக குழந்தைகளுக்கு அ, ஆ எழுத கற்பிப்பதை விட,
1) நேர்கோடுகள் வரை.  --------->  1 1 1  1 1 1 1
2) படுக்கை கோடுகள் வரை  ---> - - - - - - - -
3) ட என்ற எழுத்து உச்சரிப்புடன் --> ட  ட ட ட
4) ப  என்ற எழுத்து உச்சரிப்புடன் ---> ப ப ப ப 
5) ட்  என்ற எழுத்து உச்சரிப்புடன் ---> ட் ட் ட் ட்
6) ப்   என்ற எழுத்து                                      ப் ப் ப் ப்
7) ம  என்ற எழுத்து                                      ம் ம் ம் ம்
8) பயிற்சி - 1  படம், மடம், பட்டம், மட்டம், படபட , மடமட , பப்படம்
இதன் மூலம் கை வளைவதற்கு சிரமமின்றி பல வார்த்தைகளை குழந்தையால் கற்க முடியும்.
வீட்டிலோ, வெளியிலோ அந்த வார்த்தைகளை கண்டால் உச்சரிக்க உற்சாகமாக முயலும்.
அடுத்தது, பா, டா, ர , ரா, மா, ய, யா எழுத்துக்கள்
பயிற்சி 2 : ரமா, டாடா, டமார், பயம், ராம், டாட்டா, பரம், ராமா, பரபர, மயம், யார், மாயமாய், படார், பார்.
கடைசி பயிற்சி வரும்போது கையில் எழுதுகோலை வளைத்து எழுத முயலும் போது வளைவு எழுத்துக்களையும், அ, ஆ, இ போன்ற எழுத்துக்களை கற்பிக்க முயலும் நேரத்தில் குழந்தையின் மொழியறிவும் வார்த்தை வளமும் அதிகம் இருக்கும், அதிக வார்த்தைகளை அனாயசமாக எழுதவும் படிக்கவும் தன்னம்பிக்கையுடன் ஆர்வத்துடன் படிப்பது திண்ணம்.
எனவே, சமச்சீர் திட்டத்தில் இதனை முதல் வகுப்பில் சேர்க்க காந்திகிராம பல்கலைக் கழகத்தின் சம்பந்தப் பட்ட அதிகாரிகளின் அனுமதி பெற்று சேர்க்க வேண்டும் என விரும்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக