ஞாயிறு, 23 ஜனவரி, 2011

குடிச்சது அவன். துடிச்சது நான்.

எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கிலக் கவிதை.

அம்மா,
நேற்று ஒரு விருந்துக்குச் சென்றேன்.
நன்றாக நினைவில் இருக்கிறது.
என்னைக் குடிக்காதே என்று
நீ சொன்னதம்மா.
நானும் குடித்தேன்
சோடா மட்டும்.

அம்மம்மா!
எவ்வளவு பெரிய சாதனை!
சாப்பாடு முன்னாடி இல்லாமல்
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கலாம்.
சாப்பாட்டை முன்னாடி வைத்துக் கொண்டே
சாப்பிடாமல் இருப்பது
அம்மம்மா!

குடிக்காமல் வண்டி ஓட்டினேன் அம்மா!
எவ்வளவு பேர்
ஒருவரா / இருவரா?
அங்கிருந்த அனைவரும்
வற்புறுத்தியும்
ம்ஹூம் நான் குடிக்கவேயில்லை.

சரிதானே அம்மா நான் செஞ்சது?
எனக்கு தெரியும்
நீ சரியானதைத்தான் சொல்வாய் எப்போதும்.
விருந்து முடியும் நேரமம்மா
விடைபெற்று செல்ல
அனைவரும் தயார்.
ஒருவர் ஒருவராக
கிளம்பிட்டாங்க.

எனக்குத் தெரியும்,
காரில் நான் ஏறும்போதே
வீட்டிற்கு முழுசா
போய் சேர்ந்துடுவேன்னு.
ஏன் தெரியுமா?
உன்னோட வளர்ப்பு
சோடை போகுமா?

காரை கிளப்பினேன்.
ரோட்டுக்கும் வந்து விட்டேனம்மா!
அப்போதுதான்
அது நடந்தது.
அந்த இன்னொரு கார்
என் காரை
கவனிக்காமல்
ஆமாம்
கவனித்திருக்காது.
என் காரின் மேல்
வேகமாக மோத
......

அந்த ரோட்டின் ஓரத்தில்
அம்மா
அப்படியே அசையாமல்
கிடந்தேன்.
காதில் கேட்டது.
அந்த போலீஸ்காரன் பேசினது.
”கண்டிப்பா இவனில்லை.
அவந்தான் குடிச்சிருக்கான்.”
குடிச்சது அவன்
துடிச்சது நானம்மா.

செத்துகிட்டு இருக்கேம்மா!
எனக்குத் தெரியும்.
நீயும் இங்கே
வருவாய் சீக்கிரம்.
எனக்கு மட்டும் ஏம்மா?
செத்துப் போகணும் சும்மா?

என்னை சுத்தி
இரத்தம் அம்மா இரத்தம்.
என்னோட இரத்தம்தான்.
இல்லை இல்லை
உன்னோட இரத்தம்தான்.
டாக்டர் சொல்றது
காதில் விழுது.
”அதிக நேரம் தாங்காது”

ஒன்னே ஒன்னு
உங்கிட்டே சொல்லனும்மா
சத்தியமா
நான் குடிக்கவே இல்லை.
குடிச்சது அவன்.
துடிச்சது நான்.

அவன் கூட
இந்த விருந்துக்குத்தான்
வந்திருப்பான்.
என்ன
ஒரே ஒரு
வித்தியாசம்.
குடிச்சது அவன்.
மடியப் போறது நான்.

சொல்லம்மா
ஏம்மா அவங்க குடிக்கணும்?
குடி குடியை கெடுக்கும்.
தெரியும்.
தெரிஞ்சும் ஏன்?
வலிக்குதம்மா
ரொம்ப
வலி
மார்பிலே
கத்தியாலே
குத்தின மாதிரி.

என் காரை இடிச்சவன்
அவன்தாம்மா
அங்கே
நடந்து போறான் பாரும்மா!
செத்துகிட்டு இருக்கேன் நான்.
வேறு என்ன அவனால் செய்ய முடியும்?
என்னைப் பார்த்துகிட்டே இருக்கிறதை விட?
சரியா இது
சொல்லம்மா?
(சமர்ப்பணம்: கோவையில் 31-12-2010 அன்று புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பைக்கில் போன போது பின்னாடி வந்த பைக் வேகமாக மோதியதால் இறந்து போன என் பழைய மாணவன் பிரேம்குமாருக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக