செவ்வாய், 25 ஜனவரி, 2011

குடி – அரசு – தினம் – வாழ்த்து.

வாய்யா ! என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம்?

ஊருக்குப் போயிருந்தேன். சரி. குடியரசு தின வாழ்த்துக்களைப் பிடி.

கேட்க வேண்டும் என நினைத்திருந்தேன். குடியரசு என்றால் என்னப்பா? வெள்ளைக்காரன்கிட்டேயிருந்து விடுதலை வாங்கிட்டோம். குடியரசு யாருகிட்டேயிருந்து வாங்கினோம்? என்ன வித்தியாசம்?

இரு. இரு. அடுக்கிட்டே போகாதே. ஒவ்வொண்ணா கேளு. சொல்றேன்.
சுதந்திரத்திற்கு முன்னாடி மன்னராட்சி இருந்தது. இப்போ நடக்கிறது மக்களாட்சி. அதாவது மக்கள் சேர்ந்து ஒருவரை தேர்ந்தெடுக்கலாம். ஐந்து வருடங்களில் அந்த ஆள் ஒன்னுமே செய்யலைன்னா வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கலாம். இவரை வீட்டுக்கு அனுப்பிடலாம்.

நல்லா புரியுது. ஆனா அந்த இன்னொருவர் எங்கே இருப்பார்? என்னைக் கூட தேர்ந்தெடுப்பார்களா?

ஆசையை பாரு. நீ ஏதாவது தலைவருடைய மகனாக (மகள் கொஞ்சம் கஷ்டம்.) இருந்தால் தலைவருடைய இடத்திற்கு உன்னைத் தவிர வேறு யாருக்கும் உட்கார தில் இருக்காது. அதாவது தலைவருக்கு அரசியல் வாரிசு தலைவருடைய மகன்தான்.

இரு. இரு. இது ஏதோ மன்னராட்சி மாதிரி இருக்குதே. அப்போ சோழன் காலத்தில் இருந்துச்சே குடவோலை முறை மாதிரியா இந்த தேர்தல்?

இது வேறு. குடவோலை காலத்தில் சாதாரண மனிதன் கூட மன்னராக முடியும். இப்போ குறைஞ்சது ஒரு கண்டெயினர் நிறைய பணம் வச்சிருக்கிற தலைவர் மகன்தான் அரசியலில் பெரிய தலையாக முடியும்.

எனக்குப் புரியலை. இப்போ இருக்கிற மாதிரி அன்னைக்கி இந்தியா இல்லைதானே?

கரெக்ட். அப்போது 554 சமஸ்தானங்களாக இந்தியா பிரிந்திருந்தது. நம்ம சர்தார் வல்லபபாய் படேல் அதை ஒன்னாக சேர்த்து பாரதம். இந்தியன் யூனியன் அப்படின்னு பேரு வச்சாரு.

இப்போ புரியுது. ஏன் எந்த சமஸ்தானத்துக்காரன் கூட தண்ணீர் மற்றவங்களுக்கு தர மாட்டேங்கிறான். மறுபடியும் தனித்தனியாக போக ரெடி அப்படின்னு தைரியமா பேட்டி கொடுக்கிறான். இவனுங்களை பிரிவினைவாதிகள் அப்படின்னு தைரியமா கைது பண்ணி உள்ளே போடலாம். போடணும். சரி. இந்த பேருக்கு என்ன அர்த்தம்?

நீ எதுக்கு அடி போடுறேன்னு புரியுது. குடி என்று அரசு சொல்றதை வாழ்த்தறது தப்பு. குடி என்றால் மக்கள் என அர்த்தம்.

அப்படியா! அப்போ சரி. குடியரசு தின வாழ்த்துகள்.

ஜெய் ஹிந்த் !

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

குடிச்சது அவன். துடிச்சது நான்.

எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கிலக் கவிதை.

அம்மா,
நேற்று ஒரு விருந்துக்குச் சென்றேன்.
நன்றாக நினைவில் இருக்கிறது.
என்னைக் குடிக்காதே என்று
நீ சொன்னதம்மா.
நானும் குடித்தேன்
சோடா மட்டும்.

அம்மம்மா!
எவ்வளவு பெரிய சாதனை!
சாப்பாடு முன்னாடி இல்லாமல்
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கலாம்.
சாப்பாட்டை முன்னாடி வைத்துக் கொண்டே
சாப்பிடாமல் இருப்பது
அம்மம்மா!

குடிக்காமல் வண்டி ஓட்டினேன் அம்மா!
எவ்வளவு பேர்
ஒருவரா / இருவரா?
அங்கிருந்த அனைவரும்
வற்புறுத்தியும்
ம்ஹூம் நான் குடிக்கவேயில்லை.

சரிதானே அம்மா நான் செஞ்சது?
எனக்கு தெரியும்
நீ சரியானதைத்தான் சொல்வாய் எப்போதும்.
விருந்து முடியும் நேரமம்மா
விடைபெற்று செல்ல
அனைவரும் தயார்.
ஒருவர் ஒருவராக
கிளம்பிட்டாங்க.

எனக்குத் தெரியும்,
காரில் நான் ஏறும்போதே
வீட்டிற்கு முழுசா
போய் சேர்ந்துடுவேன்னு.
ஏன் தெரியுமா?
உன்னோட வளர்ப்பு
சோடை போகுமா?

காரை கிளப்பினேன்.
ரோட்டுக்கும் வந்து விட்டேனம்மா!
அப்போதுதான்
அது நடந்தது.
அந்த இன்னொரு கார்
என் காரை
கவனிக்காமல்
ஆமாம்
கவனித்திருக்காது.
என் காரின் மேல்
வேகமாக மோத
......

அந்த ரோட்டின் ஓரத்தில்
அம்மா
அப்படியே அசையாமல்
கிடந்தேன்.
காதில் கேட்டது.
அந்த போலீஸ்காரன் பேசினது.
”கண்டிப்பா இவனில்லை.
அவந்தான் குடிச்சிருக்கான்.”
குடிச்சது அவன்
துடிச்சது நானம்மா.

செத்துகிட்டு இருக்கேம்மா!
எனக்குத் தெரியும்.
நீயும் இங்கே
வருவாய் சீக்கிரம்.
எனக்கு மட்டும் ஏம்மா?
செத்துப் போகணும் சும்மா?

என்னை சுத்தி
இரத்தம் அம்மா இரத்தம்.
என்னோட இரத்தம்தான்.
இல்லை இல்லை
உன்னோட இரத்தம்தான்.
டாக்டர் சொல்றது
காதில் விழுது.
”அதிக நேரம் தாங்காது”

ஒன்னே ஒன்னு
உங்கிட்டே சொல்லனும்மா
சத்தியமா
நான் குடிக்கவே இல்லை.
குடிச்சது அவன்.
துடிச்சது நான்.

அவன் கூட
இந்த விருந்துக்குத்தான்
வந்திருப்பான்.
என்ன
ஒரே ஒரு
வித்தியாசம்.
குடிச்சது அவன்.
மடியப் போறது நான்.

சொல்லம்மா
ஏம்மா அவங்க குடிக்கணும்?
குடி குடியை கெடுக்கும்.
தெரியும்.
தெரிஞ்சும் ஏன்?
வலிக்குதம்மா
ரொம்ப
வலி
மார்பிலே
கத்தியாலே
குத்தின மாதிரி.

என் காரை இடிச்சவன்
அவன்தாம்மா
அங்கே
நடந்து போறான் பாரும்மா!
செத்துகிட்டு இருக்கேன் நான்.
வேறு என்ன அவனால் செய்ய முடியும்?
என்னைப் பார்த்துகிட்டே இருக்கிறதை விட?
சரியா இது
சொல்லம்மா?
(சமர்ப்பணம்: கோவையில் 31-12-2010 அன்று புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பைக்கில் போன போது பின்னாடி வந்த பைக் வேகமாக மோதியதால் இறந்து போன என் பழைய மாணவன் பிரேம்குமாருக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.)

செவ்வாய், 18 ஜனவரி, 2011

பாராட்டுகிறோம்

2011 ஜனவரி 15ல் மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய யோகா போட்டிகளில் கோவையிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக்.மேனிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வி.ஷியாம்குமார் (ஆண்களுக்கான 8 - 11 வயதுப் பிரிவில்)இந்திய அணி சார்பாக பங்கேற்று இரண்டு போட்டிகளில் முதலாவதாக வென்று இரண்டு தங்க பதக்கங்களைப் பெற்றுள்ளான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சனி, 1 ஜனவரி, 2011

என்ன கொண்டு வந்தாய் புத்தாண்டே?

மீண்டும் ஒரு புத்தாண்டு
தலைவர்களின் வாழ்த்துக்கள்
பழைய உறுதிமொழிகளே
உறுதியற்று கிட்டாது என
தொலைந்து போனதாக முடிவான நிலையில்
மீண்டும் தூசி தட்டி இன்று.

திரும்பி பார்க்கவே அஞ்சும்போது
விரும்பி பார்க்க எங்கிருக்கிறது எதிர்காலம்?
அரும்பிய ஆசைகள்
துரும்பு கிடைக்காதா என துவண்ட மனம்
பொறுப்புகளின் சுமையில் சலித்த தோள்கள்.

பெரிசுகளின் அந்த கால பெருமைகள்.
சிறிசுகளின் விடுமுறை குதூகலங்கள்.
புத்தாண்டானால் என்ன?
இரவில் தூங்க மறுப்பவர்களை தூங்கச் சொல்லி
பின் தூங்காமல் தூங்கி
அதிகாலையில் எழுந்த கோலமே
வாசலில் புத்தாண்டு வாழ்த்துகளாய்
விரியும் வீட்டு பெண்களின் ......
மீண்டும் ஒரு புத்தாண்டு.

என்ன சொல்லி என்ன?
இரண்டு நாள் விடுமுறையோடு
வந்த புத்தாண்டே
என்ன கொண்டு வந்திருக்கிறாய்?

எத்தனை ஊழல் செய்யும்
எத்தனை அரசிய்ல்வாதியாக
எத்தனை காலம்தான் பொறுப்பது?
அத்தனை வேலைகளும்
செய்யும் எந்திரன் செய்வது எப்போது?
எந்திரனும் காதலிக்கும்போது
செய்துவிடுமோ ஊழல்?
பயமாய் இருக்கிறது.