ஞாயிறு, 16 அக்டோபர், 2011

வா.மணிகண்டனின் (புலி)கவிதைப் பால்!

பின்குறிப்பாய் அமைய வேண்டிய ஒரு முன்குறிப்பு.
ஓரிரு தகவல் பிழைகளைத் திருத்தி எழுதியிருக்கிறேன். 
அடுத்து ஒரு பதிவு எழுதக் கூடும்.


வழக்கம் போல் இம்முறையும் தாமதமாகவே சென்றேன். எனது கருத்துக்களை இங்கு முதலாவதாக வைக்கிறேன். மணிகண்டன் ஓரளவு வாசித்திருக்கிறார் என்பது அவரது பேச்சில் புலப்பட்டது. ஆனால் அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களிடையே பேசும்போது சிறிது தடுமாற்றம் தென்பட்டது. நான் சொல்ல வந்த தடுமாற்றம் மூத்தவர்களுக்கு ஏற்பட்டது. அவர் வைத்த சில கருத்துகளே காரணம்.

கருத்து ஒன்று.

திருவள்ளுவர்க்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகே பாரதியாரின் கவிதாளுமையை பார்த்ததாக கூறினார். இது ஓரளவுக்கு சரியாகவே எனக்கு படுகிறது. இதற்கு சற்று விரிவான விளக்கம் தர வேண்டும்.  

கருத்து இரண்டு

சில கவிஞர்களின் பெயர்களை குறிப்பிட்டார். சிலரது பெயர்களை தவிர்த்தாரென்று சுட்டி காட்டப் பட்டது. இது எனக்கு பெரிய குறையாக எனக்குப் படவில்லை. இன்குலாப் பெய்ரையும் மேத்தாவின் பெய்ரையும் அவர் ஒருங்கே குறிப்பிட்டது கூட சிலர் எதிர்த்தனர். இது சரியல்ல.

அவர்களுக்கு வைரமுத்துவும் மேத்தாவும் திரைப்படங்களில் எழுதியதாலேயே அவர்களை இன்குலாப்புடன் சேர்த்து கூறக் கூடாது என்பது என்ன நியாயம்?

கருத்து மூன்று
கவிஞர்கள் எதனையும் சாராது தனித்து இயங்கினால்தான் கவிதைகள் சிறப்புற படைக்க இயலும் என்றார்.
இதனை முழுமையாக நான் ஏற்கிறேன்.
ஆனால் இக்கருத்தை வன்மையாக சிலர் கண்டித்தனர்.  இதில் அரசியல் என்கிற தனது வாதத்தை பொதியவெற்பன் வைத்தார். தான் கம்யூனிஸ்ட் இல்லை ஆனால் மார்க்ஸீய வாதி என்று விளக்கினார்.
நான் இதில் மணிகண்டனோடு உடன்படுகிறேன். விளக்கம் கடைசியில் தருகிறேன்.

கருத்து நான்கு
கவிதையினை ரசனை வாயிலாகவும் கோட்பாடு வாயிலாகவும் பகுத்து கூறினார். இதற்கும் சிலர் உடன்படவில்லை.
எனக்கும் இதில் மாறுபட்ட கருத்து உள்ளது. மணிகண்டன் அவர்களுக்கு இதனை விளக்க அச்சமயத்தில் போதுமான வார்த்தைகள் கிடைக்க வில்லை எனக் கருதுகின்றேன். இன்னும் ஆழமாக இதனைப் பார்க்க வேண்டும்.

இனி ஒவ்வொன்றாக பின்னோக்கிப் பார்ப்போம்.

கவிதையை ரசனை வாயிலாக பார்க்கும் போது வாசகன் கவிதையினை உணர்கின்றான். கவிதையை படைத்த பிறகு கவிதை கவிஞனுக்குச் சொந்தமில்லை. வாசகனுக்குச் சொந்தமாகிறது.
கவிதையை கோட்பாட்டின் வாயிலாக பார்க்கும்போது திறனாய்வாளனுக்குச் சொந்தமாகிறது.

இங்கு ரசனையைப் பெறுவது மட்டுமே வாசகனுக்கு போதும் என்றார் மணிகண்டன். அதனை  நான் ஏற்கிறேன்.
வாசகன் அந்த ரசனையை உணர்வதே போதும். அதனை விவரிக்க வேண்டியதில்லை. அது திறனாய்வாளனின் பணி.

பொருத்தமாக இன்று (ஞாயிறு) காலை சன் தொலைக் காட்சியில் சுகி சிவம் கவிஞர்களைப் பற்றிக் குறிப்பிட்டார். (அதைக் கூட முழுமையாக என்னால் பார்க்க முடியவில்லை. வகுப்பு எடுக்க ஓடிவிட்டேன். கடவுளே!)
அதில் மனிதன் பார்க்கிறான். கவிஞன் உற்றுப் பார்க்கிறான். விஞ்ஞானி ஆய்ந்து பார்க்கிறான். மெய்ஞ்ஞானி உணர்ந்து பார்க்கிறான் என்று அழகாக விளக்கினார்.

கவிஞனுக்கு உற்றுப் பார்த்தலே போதுமானது. கண்ணாடி கொண்டு பார்த்தால் கவிதையின் முழுமை வெளிப்படாது.
எனவே கவிஞன் எந்த இயக்கத்தையும் சாராது தனித்து இயங்க வேண்டும் என்று தனது விருப்பத்தினை திரு.மணிகண்டன் கூறியது பார்வையாளர்களியிடையே தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டது எனக் கருதுகின்றேன்.

எனவே கம்பன் ஒரு சமயத்தினரின் (வைணவம்) வேண்டுகோளுக்கு இணங்க மொழிபெயர்த்தது ஒரு பணியே (செய்யுள்) தவிர சுயமான கவிதை இல்லை என்றதை ஏற்ற பார்வையாளர்கள்  திருவள்ளுவருக்குப் பிறகு தோன்றிய அனைத்து இலக்கியங்களும் பாரதிக்கு முன் வரை பக்தி சார்ந்தும் அந்தந்த காலகட்டங்களில் தோன்றிய இயக்கங்களினைச் சார்ந்த படைப்புகளை 
ஒரு வ்ரையறை வகுத்துக் கொண்டு அதனுள் இயங்கிய படைப்பாளிகளை கவிஞர்களாக என்னாலும் ஏற்க முடியவில்லையென்றாலும் பார்வையாளர்கள் ஏற்கவில்லை.

திருவள்ளுவருக்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளில் பாரதியாரில்தான் கவிதை நிற்கிறது என்ற போது பொதியவெற்பன் “பக்தி இலக்கியம், சித்தர் பாடல்கள், கம்பராமாயணம்” எல்லாம் கவிதைகள் இல்லையா என்றார்.

கவிஞன் சுயமாக படைத்தால்தான் கவிதை கவிதையாக மிளிரும். அன்றி வெறும் செய்யுளாக திறனறித் தேர்வாக அமையும் எனக் கருதுகின்றேன்.

 நம் சங்க காலப் பாடல்கள் ஏறக்குறைய அனைத்தும் சில தனிப்பாடல்களைத் தவிர ஒரு கட்டாயத்தின் பேரிலோ ஒருவரின் வேண்டுகோளின் அடிப்படையிலோ, இயற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இயற்றப்பட்டன. இவை எங்ஙனம் கவிதையாகும்?

இதனையே திரு. மணிகண்டனும் குறிப்பிட்டார்.

இவ்வாறே கவிஞர்களை பட்டியலிடுவதும் ஒருவர் கவியா அல்லது மகா கவியா என்கிற சர்ச்சையில் ஈடுபடுவதும் தேவையற்ற ஒன்று. கவிதைகளை உணர்ந்தவர்கள், புரிந்தவர்கள் செய்வது இல்லை.

 ஐயா, நீங்கள் ஒருவரை மகாகவி என்று ஒருவரை ஏத்துவதால் அவருக்கு ஒரு பாதிப்பும் இல்லை. ஒருவரை மகாகவி இல்லை என்று தாழ்த்துவதால் சொற்சிலம்பினால் அடித்த வலிதான் மிஞ்சும். ஒருவர் திரைப்படத்திற்காக எழுதுகிறாரா அல்லது அவரது கவிதையை திரைப்படத்தில் பயன்படுத்துகிறார்களா என்பதை வைத்தா ஒரு கவிஞரையோ கவிதையையோ மதிப்பிடுவது? அல்லது புறக்கணிப்பது?

ஒரு கவிதையை திறனாய்வாளரின் கண்ணோட்டத்தில் தொகுப்பாய்வாகவோ, பகுப்பாய்வாகவோ மட்டுமே பார்க்க வேண்டும். தனி மனித விருப்பு வெறுப்புகளை கவிதை வரிகளில் தேடுவது அபத்தமாக எனக்குப் படுகிறது.

இத்தகைய விவாதங்கள் ஜெமோவின் வார்த்தைகளில் சொல்வதானால் எனக்கும் அலுப்பூட்டுகிறது.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் கவிதைகளில் வரிகளாய் பார்ப்பதை விடுத்து அதன் தருணங்களைப் பாருங்கள். அத்தகைய தருணங்களில்தான் படைப்பாளியும் வாசகனும் ஒருங்கே இணைய முடியும் என நான் கருதுகின்றேன்.


இறுதியாக, அருவி அமைப்பின் முயற்சிகள் இன்றைய மாணவ சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லி இத்தகைய அமைப்பின் அமர்வுகளுக்கு மாணவச் சமுதாயத்தை பங்கேற்க இப்பதிவை படிக்கும் அனைவரும் கண்டிப்பாக முயல வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். எனவேதான் என் வழக்கமான பதிவுகள் சில பதிப்பிக்க காத்திருந்தும் இப்பதிவை அவசரமாக எழுதுகின்றேன்.






 

1 கருத்து:

  1. அருமையான பதிவு. விரிவாக விவரித்திருக்கிறீர்கள்.

    இடுகை இடுமுன் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே > :(

    பதிலளிநீக்கு