இன்று இட்லிவடை என்ற வலைப்பூவில் ஆண்டாளைப் பற்றியும் காமத்தைப் பற்றியும் படித்தேன். இவர்களுக்கு ஆண்டாளையும் தெரியாது. காமத்தைப் பற்றியும் புரியாது என்பதற்கு இன்றைய பதிவு ஒரு நல்ல உதாரணம். இதில் திருவள்ளுவரைப் பற்றி எழுதியிருந்தது என்னைக் கவர்ந்தது. எனவே, திருக்குறளிலிருந்து காமம் என்ற சொல்லின் பொருள் காண்போம்.
காமம் என்ற சொல் அறத்துப் பாலில் தனி நிலைச் சொல்லாகவே ஓரிடத்தில் வந்துள்ளது. பொருட்பாலில் தொடருக்கு நிலை மொழியாக ஓரிடத்திலும், சொல்லுக்கு முதல் நிலையாக நான்கு இடங்களிலும் வந்துள்ளது.
காமத்துப் பாலில் மட்டும் நோக்கினால், தனி நிலைச் சொல்லாகவோ, சொல்லுக்கு முதல் நிலையாகவோ முப்பத்தெட்டு இடங்களில் காமம் என்ற சொல் வந்துள்ளது.; காமன் என்ற வடிவில் ஓரிடத்தில் வந்துள்ளது. இன்பம் என்ற சொல்லோ காமத்துப் பாலில் இரண்டே இடங்களில் மட்டுமே வந்துள்ளது.
- அவ்விரண்டிலுங்கூடக் காமம் என்ற சொல்லும் உடன் வந்துள்ளது.
- காமம் இழிவு என்ற கருத்துடையவர்கள் திருக்குறளில் `காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கூடும் நோய்` என்ற குறளைச் சுட்டி காட்டுவர். இங்கு காமம் என்ற சொல் இழிந்த பொருளில் வந்துள்ளது என்பது உண்மையே. ஆனாலும் அதன் பொருள் என்ன?
- காமம் என்ற சொல்லுக்கு பரிமேலழகர் `விழைவு` என்று பொருள் கூறுகிறார். பின்னர் விளக்க உரை கூறும்போது ஆசை என்று பொருள் கூறி, அவாவும் அதன்கண் அடங்கும் என்கிறார்.
- `எனக்கு இது வேண்டும் என்பது அவா எனவும் `அது பற்றி அப்பொருள்கண் செல்லுவது ஆசை எனவும் விளக்குகிறார்.
- எனக்கு இது வேண்டும் என்று கருதுவதால் மன நிறைவு குன்றுகின்றது. அது பற்றி அப்பொருள் கண் செல்லும் போது அம்மன நிறைவு மேலும் குறைகின்றது.
- எனவே, காமம் என்பதற்கு நிறைவு குறைதல் என்பதே பொருள்.
- ஆதாரங்கள் - `கமம் நிறைந்தியலும்` - தொல்காப்பியம்.
- முனைவர் மொ.அ.துரை அரங்கசாமி எழுதிய `காமத்துப் பாலா, இன்பத்து பாலா` என்ற ஆராய்ச்சி நூல்.
- காமம் என்ற தமிழ் சொல் இழிவான சொல் அல்ல. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பெருமாளை சரணடைந்த ஆண்டாளின் திருப்பாவை பற்றி நாளை எனது கருத்தை பதிவு செய்கிறேன்.
- இலக்கியங்களின் உண்மைப் பொருளை உணராது நுனிப்புல் மேய வேண்டாம்.
- எனது இந்த வலைப் பூவின் நோக்கமும் திருத்தம் என்ற வலைப் பூவின் நோக்கமும் இதுவே.