பாஸ்கர் அவர்களின் ஹைகூ (குறும்பா) கவிதைகள் – ஒரு பார்வை.
முதலில் அவரது கவிதை - 1
***************************************
நின்று கொண்டேயிருக்கிறது
கேள்விகளுக்கு விடை அறியாமல்
மரம்
**************************************************
இந்தக் கவிதையை படிக்கும்போது என் நினைவிற்கு
வரும் கவிதை.
மண்ணுக்குள் கூந்தலை
மறைத்து புதைத்து விட்டு
கைகளில் பூச்சூடி
களிக்கின்ற பைத்தியங்கள்.
இனி என் பார்வை.
கேள்விகளுக்கும் மரத்திற்கும் ஆதியிலிருந்தே தொடர்பு இருந்திருக்க வேண்டும். இல்லாவிடில் ஏன் கேள்விக்கு பதில் தெரியவில்லையென்றால் மரம் மாதிரி நிற்கிறாய் என வினவுகிறார்கள்?
எனவே இந்தக் கவிதை ஒரு உண்மையை தெளிவாகச் சொல்கிறது.
கேள்விகளுக்கு விடை தெரியாமல் நின்று கொண்டேயிருக்கட்டும். ஆனால் கேள்வியே என்ன எனத் தெரியவில்லை. யார் கேட்டது என்று புரியவில்லை.
எப்போது கேட்டிருக்க கூடும்?
மரம் முளைத்த போதா? அப்போது அது செடி. மரம் அல்ல.
வளர்ந்து மரமாக உரம் ஏறிய போதா? எக்கணத்தில் ஏற்பட்டது அந்த மாற்றம் என்பது அந்த மரத்திற்கே தெரியாது.
நின்று கொண்டிருந்த மரம்
சாய்ந்த பின்னர்
பதில் சொல்லி விட்ட பின்னர்தான்
சாய்ந்ததா
இல்லையா என யாருக்குத் தெரியும்?
இங்கு பேயோன் அவர்களின் கவிதையை குறிப்பிட விரும்புகிறேன்.
மழை பெய்கையில்
உன் ரம்மிய நினைவு.
மழை நின்றுவிட்டால்
யாரம்மா நீ?
மழையும் நிற்கிறது. மரமும் நிற்கிறது
இங்குதான் இந்த கவிஞர்கள் நிற்கிறார்கள்.
அடுத்த கவிதை இரண்டாக இருந்தாலும் சேர்த்தும் பார்க்கலாம்.
**********************************
தேடுகிறேன்
தொலைத்த காதலை
கடற்கரை மணலில்
திரும்பப் போகத் தானா
அடித்துக் கொண்டு வருகிறது
அலை
********************************************************
காதலை சொன்ன இடத்தில் தொலைத்துவிட்டு தேடுவது பொருத்தம்.
ஒருவேளை மணலில் எழுதிய கவிதையாக இருந்திருக்குமோ இந்தக் காதல்?
அல்லது, அடுத்த வரிகளைப் பார்க்கும்போது அலை வருவதே தொலைத்த காதலை தேடத்தானோ?
அது சிலப்பதிகாரக் காதலோ?
ஒரு மிகப் பெரிய ஜென் தத்துவமும் இதில் ஒளிந்துள்ளது. எவ்வளவு பேருக்கு புரியும் எனத் தெரியவில்லை. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
காதலைச் சொல்லும் (வெளிப்படுத்தும்) வரை இருக்கும் காதல்
சொன்ன பின்னர் (வெளிப்படுத்திய பின்னர்) தொலைந்து விடுகிறது.
இனி கடைசிக் கவிதை தனியாக பார்த்தால்.
உடனே ஏன் திரும்ப வேண்டும்?
வரும்போது ஏன் இந்த ஆர்பாட்டம்?
அடடா
இப்போதுதான் புரிகிறது.
இங்கு எழுதியது முழுவதும் ஒரே கவிதை !
கோவலன் காலத்திலிருந்து
கேள்விக்கு விடை தெரியாமல்
நின்று கொண்டே இருக்கிறது
சாட்சியாக மரம்.
அந்தக் கேள்விக்கு பதில் சொல்லத்தான்
அடித்து கொண்டு வருகிறதா அலை?
காதலை இழந்த பிறகு இழக்க என்ன இருக்கிறது
என திரும்ப செல்கிறதோ?
தொலைத்த காதலை
கடற்கரை மணலில் தேடித் தேடி
திரும்பச் செல்லும் அலைக் கைகளை உடைய
கடல் (/காவிரித்) தாயே உனக்கு என் வணக்கம்.
மற்ற கவிதை வரிகளை பின்னர் பார்ப்போம்.
அதிலும் இந்தக் கருத்துக்கள் தொடர்வதுதான் சிறப்பு.
மேலும் பார்ப்பேன்.
நட்பாஸிற்கு நன்றி.