நண்பர் பாஸ்கர் நம் வலைப் பூவிலும் எழுத சம்மதித்துள்ளார்.
பாஸ்கர் எழுதியது
அண்மையில் நான் ஒரு வலைப்பதிவரின் தளத்தில் பின்னூட்டமிட்டேன். கணேஷ் என்பவர் அறிவியல் புதினங்கள் எழுதுகிறார், அவர் தனது தொடர் ஒன்று குறித்து சில விஷயங்களை எழுதியிருந்தார்-
"புதிய ஜீனோ ஜெனடிக் முறையை மேம்படுத்தி அதில் உருவாக்கிய கொஞ்சம் ரொபோடிக் தன்மை கொண்ட நாய்....இனி எழுதப்போகும் சில கதைகளில் இந்த ஜீனோவை அதன் அறிவுத்திறமையை உபோயிக்கலாம் என் நினைக்கிறேன்...இப்படியெல்லாம் கேட்டால் சும்மா விட்டு விடுவோமா? அதையொட்டியே நான் பின்னூட்டமிட நேர்ந்தது. ஆனால் அதன் பின் ஒரு நான்கு மணி நேரத்துக்கு அது குறித்த நினைவாகவே இருந்தது.- தமிழில் அறிவியல் புதினம் எழுதுவதானால் எப்படி எழுத வேண்டும் என்று.
அதாவது கணேஷ் – வசந்த் இவர்களில் கணேஷ் இப்போது கதை எழுதுவதால் அவனுக்கு பதில் இந்த ஜீனோ வசந்தோடு சேர்ந்து கொண்டு தன் வேலையை செய்யும்..ஜீனோவை எப்படி எந்த விசயங்களுக்கு வசந்த் பயன்படுத்திகொள்கிறான் என்பதில் இருந்து புதிய ஜீனோவின் திறமைகள் வெளிப்படும்...
இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள் இருந்தால் எனக்கு சொல்லலாம்....எனக்கு கொஞ்சம் உபயோகமாக இருக்கும்."
அதற்கு முன் நான் இட்ட பின்னூட்டத்தை சொல்லி விடுகிறேன்-
நல்ல முயற்சி நண்பரே, ஓரிரு வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன்.இவ்வளவுதானா விஷயம்?
robotics, genetics இரண்டையும் இணைத்து ஜீனோவை உருவாக்க நினைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கூடவே கொஞ்சம் biomimetics http://en.wikipedia.org/wiki/Biomimicry என்ற துறையையும் சேர்த்துக் கொள்ளலாமே?
இதுவரை தமிழில் யாரும் இதை செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
சுஜாதாவிடம் சிறப்பான விஷயம் முதலாவதாக அவரது மொழி நடை. அடுத்தது, அவர் புதிது புதிதாக எங்கெங்கிருந்தோ விஷயங்களைக் கொண்டு வருவார்.
துணிச்சலாக இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண என் வாழ்த்துகள்.
ஏறக்குறைய ஆம் என்றுதான் நினைக்கிறேன்.
பொதுவாக இன்றைக்கு சுஜாதாவுக்கே கெட்ட பேர் வந்து விட்டது. அதிலும் ஒருத்தர் சுஜாதாவைப் போல் எழுதக் கிளம்பினால் அவரை வாழ்த்தி வழி அனுப்பும்போது, புறநானூற்றுப் போருக்கு பிள்ளையை அனுப்புவாளே, அந்தத் தாயின் நினைவு வருகிறது. எல்லாரும், "நீ சுஜாதா மாதிரி எழுதாதே," என்றுதான் சொல்கிறார்கள்.
இதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு- ஒன்று, அவரை நினைவுபடுத்துகிற மாதிரி எழுதினால் நம் குறைகள்தான் தெரியும். அவரைப் போல் எழுதுவது இன்று வாழும் மனிதர்களில் எவராலும் முடியாத ஒன்று.
இரண்டாவது காரணம்- இது ஒரு எழுத்தாளனுக்கு தனித்தன்மை வராமல் செய்து விடும். ஒருத்தரை காப்பி அடித்து எழுதுவதில் என்ன பெருமை இருக்கிறது?
முதல் காரணத்துக்கு என் மறுப்பு- நான் சுஜாதா மாதிரி என்ன, என்னை மாதிரி என்ன, எப்படி எழுதினாலும் அது மோசமாகத்தான் இருக்கும்.
இரண்டாவது காரணத்துக்கு என் மறுப்பு- ஒருத்தர் எழுத ஆரம்பிக்கும்போது மற்றவரின் நடையை, அவரது பார்வையை ஒட்டி எழுதினால் தப்பில்லை. பாட்டு விஷயத்தில், நடன விஷயத்தில் இப்படித்தான் நடக்கிறது. ஏறத்தாழ எல்லா கலைகளிலும் ஆசான் ஒருவரைப் பிரதி எடுத்துத்தான் பழகுகிறார்கள். இதை நன்கு பழகிய பிறகுதான் தனக்கென்று ஒரு பாணியில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
ஆனால் அதற்காக கணேஷ், வசந்த், ஜீனோ என்று எழுத வேண்டிய அவசியமில்லை- சொல்லப்போனால் அது காப்புரிமை மீறலாகவும் இருக்கக்கூடும். எனவே இதைத் தவிர்ப்பது நல்லது.
மொழி நடை பற்றி சொல்லி விட்டேன். புதிய விஷயங்களைக் கொண்டு வந்து தருவது?
சுஜாதா அசகாய சூரர். அந்த காலத்திலேயே உலகில் புதிதாய் நடக்கிற, கவனத்தில் இருக்கிற விஷயங்களை தமிழுக்குக் கொண்டு வந்து கொடுக்கக் கூடிய அறிவு அவருக்கு இருந்தது- அதையும் அவர் வசீகரமான நடையில் செய்தார்.
நமக்கு இணையம் இருக்கிறது- தினமும் குறைந்தது ஒரு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் இணையத்தில் இதற்கென மெனக்கெட தயாராய் இருந்தால் எந்த விஷயத்தையும் சூடு ஆறுவதற்கு முன்னமேயே தெரிந்து கொண்டு விடலாம்.
அந்த வகையில் நான் இதை எல்லாமாவது பதிவோடையைப் பயன்படுத்தி வாசிக்கலாம் என்று சொல்வேன்-
New Scientist online news- http://www.newscientist.com/ வாரம் 72 பதிவுகள்.
IEEE Spectrum - http://feeds2.feedburner.com/IeeeSpectrum வாரம் 29 பதிவுகள்.
Wired top stories- http://feeds.wired.com/wired/index வாரம் 140 பதிவுகள்.
Slashdot: science- http://rss.slashdot.org/Slashdot/slashdotScience வாரம் 34 பதிவுகள்.
Science Daily - http://www.sciencedaily.com/rss/newsfeed.xml வாரம் 305 பதிவுகள்.
TED http://feeds.feedburner.com/TEDTalks_video வாரம் 5 பதிவுகள்.
அறிவியல் உலகில் எந்த புதிய, முக்கியமான விஷயமாக இருந்தாலும் அது நம் கண்ணில் படாமல் போகாது. இதைத் தெரிந்து கொள்ள தினம் ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும்.
ஆனால் கற்பனை, கதை பண்ணுவது இது எல்லாம் அவரவர் திறமை மற்றும் முனைப்பைப் பொறுத்தது. இதில் கூட ஒரு இன்ஸ்பிரேஷன் வேண்டுமென்றால் http://sff.alltop.com/ என்ற தளத்தில் ஏராளமான அறிவியல் புனைவு குறித்த விஷயங்கள் இருக்கின்றன. பொழுது போகாத சமயத்தில் இதை நோண்டிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் எது எப்படியோ, எழுத ஆர்வம், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு, தொடர்ந்த உழைப்பு- இவை இருந்தால் நிச்சயம் நம்மால் நல்ல அறிவியல் புனைவுகள் செய்ய முடியும்.
சுஜாதாவின் சிறகுகளின் பறக்க ஆசைப்படுவதை விட, சுஜாதாவை ஒரு துருவ நட்சத்திரம் போல் வைத்துக் கொண்டால் சரியான திசையில் பயணித்து இலக்கை அடைந்து விட முடியும் என்று நினைக்கிறேன்.
இதை படித்து விட்டு யாரேனும் அறிவியல் கதைகள் எழுத முனைந்தால், அவர்கள் அனைவருக்கும் எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்.